திருக்குறளில் பெள்சூழல் கருத்தாய்வு

பேராசிரியர் ப, கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

 

அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கண /இலக்கியவியல் உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் இயல்பார்வம் பிறக்கும். அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவையாகின்றது. குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை / மருட்சி ஆகியவற்றை நீக்க இத்தகைய பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாகும். சான்றாக, திருக்குறளில் ஆளப்பட்டுள்ள பெள் என்பதை அடியாகக் கொண்ட சொற்களைக் கருதலாம். இச் சொற்கள் பெயராகவும் வினையடையாகவும், ஆளப்பட்டுள்ளன. அமைப்புச் சூழலுக் கேற்பவும் தொடர்ப் பொருண்மை நோக்கிலும் இத்தகைய சொற்களை நுணுகி ஆராய்ந்து கருத்துணரவேண்டும்.   இக் கட்டுரை பெட்டு என்னும் சொல்லை மாறுபட்ட பல கருத்துகளில் திருவள்ளுவர் ஆண்டுள்ளதை விளக்குவதாக அமைகின்றது. சொல், தொடர்ப் பொருண்மை நோக்கில் அணுகினால் விழுமியங்களைத் தெளிவாக அறியலாம் என்பது இவண் கருதுகோளாகும்.

பெள் :

      அடிப்படையில் பெறுதல்; விரும்புதல்; அடைய முயல்தல் என்னும் பொருளில் இச் சொல் இயல்கின்றது. பேச்சு வழக்கிலும் தெலுங்கு மொழியிலும் பெற்றுக்கொள்தல் என்னும் கருத்தில் பெட்டு என்றுஆளப்படுகின்றது. பின்வரும் குறட்பாக்களில்,

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் (141)

           [பெட்டு = விழைந்து; வினையெச்சம்]

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு ( 732 )

   [பெட்டக்கது = விரும்பப்படுகின்ற  பொருள்; வினையாலணையும்பெயர்]

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர் (908)

    [ பெட்டாங்கு= விரும்பியவாறுவினையெச்சம் ]

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்(1178)

    [பெட்டார்= விழைந்தவர் ; வினையாலணையும்பெயர் ]

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்(1257)

      [பெட்ப விரும்பியவற்றை ;  வினையாலணையும்பெயர்]

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து(1276)

       [பெட்பவிரும்பியவாறு ;  வினையெச்சம்]

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண் (1283)

       [பெட்பவிரும்பியவற்றை ;  வினையாலணையும்பெயர்]

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல் (1293)

[பெட்டவிரும்பியவாறு ;  வினையெச்சம்]

இவ்வாறாக, விரும்பல், விழைதல்  என்னும் பொருளுடைய பெள்என்னும் அடிச்சொல் வினையடையாகவும் வினையாலணையும் பெயராகவும்  இயல்வதை அறியலாம்.

            இலக்கியத் தொடர்களில் பயில்கின்ற சொற்களைச் சூழல் நோக்கிக் கருத்துணர்ந்தால் புரிதிறன் சீராகும்; படைப்பின் பயனை முழுமையாக நுகரலாம்.

                                              பயன்பட்டவை

  https://www.ytamizh.com/thirukural/kural

   (http://tamilconcordance.in)

                                       ***********   

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு