திருக்குறளில் ‘புல்’ : சூழல் கருத்துப் பொருண்மை
ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
தமிழுக்கும் தமிழர்க்கும் பல நிலைகளில் பெருமை சேர்ப்பதோடு , பலதுறை ஆய்வுக் களனாக அமைந்திலங்குவன தொல்காப்பியமும் திருக்குறளும். தொல்காப்பியத் தெளிவோடு திருக்குறளை அணுகினால் தெளிவு வசப்படும்; வள்ளுவ விழுமியத்தை விளங்கிக்கொள்ளலாம். தோன்றுகின்ற காலப் பண்பாடு, மொழி நிலை, பாடுபொருள், இலக்கிய வகைமை, படைப்பாளரின் மொழி / படைப்பு ஆளுமை ஆகியவற்றிற்கேற்ப ஓர் இலக்கியத்தின் சொல்லாட்சி / நடை இயலும். ஆகையால் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் சூழல் நோக்கிப் பொருளுணரவேண்டும். அவ் வகையில் ‘புல்’ என்னும் சிறிய / வலிமையற்ற என்னும் கருத்துடைய சொல் வள்ளுவத்தில் பயில்கின்ற பான்மையை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது.
புல் ; சொற்பொருள் :
தமிழிலுள்ள சொற்கள் காரணப் பெயர்கள் / கருத்து முதலன. அந் நிலையில் தாவரங்களை வகைப்படுத்துகையில் , வலிமையான பெரிய மரத்தோடு / செடியோடு ஒப்பிட்டு, வலிமையற்ற குள்ளமான சிறு தாவரங்களை ’புல்’ என்று குறித்ததை மரபியல் 84ஆம் நூற்பாவால் அறிகின்றோம். அடுத்ததாக, புல் என்னும் சொல் வினையாக, அணைத்தல்; தழுவுதல் என்னும் கருத்திலும் தொன்றுதொட்டு இயல்கின்றது. புல்லின் வலிமையற்ற பண்பை ‘ கீழான’ என்னும் பொருளில் பெயரடையாகவும் ஆளலாம். எனவே புல் பல்பொருட்சொல்லாக இயல்கின்ற மொழி வரலாற்று/ சூழற் பொருண்மை வழக்காற்றை நோக்கி, திருக்குறளில் இது ஆளப்பட்டுள்ள பான்மையைத் தெளியலாம்.
வள்ளுவத்தில் புல்:
இலக்கிய/ மொழித் தொழில்நுட்பத்தைச் செவ்வனே பயன்கொண்டு திட்டமிட்டுப் படைக்கப்பட்டுள்ள திருக்குறளில் புல் பெயராக, பெயரடையாக, வினையாக இயல்கின்றது. புன்மை என்னும் பொருளுடைய புல் பெயராக,
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது ( குறள் 16 )
என்னும் குறட்பாவில் சிறிய தாவரமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, பெயரடையாக,
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசெலச் சொல்லு வார் ( குறள் 719 )
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை( குறள் 331 )
என்னும் குறட்பாக்களில் நல்ல என்னும் பண்புப் பெயரடையின் எதிர்மறையாக, புல் என்னும், கீழான/புரிதலில்லாத என்னும் கருத்தில் பெயரடையாகப் பயில்கின்றது. இவ்வாறு 85, 846, 914, 915, 916 போன்ற குறட்பாக்களும் அறியத்தக்கன. மேலும்,
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று ( குறள் 829 )
என்னும் குறட்பாவில் சாப்புல்லல் என்னும் மரபுத் தொடரின் ஒரு கூறாக, நலிவு என்னும் கருத்தில் வாய்க்கின்றது. அடுத்து,
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று (குறள் 1290)
என்னும் குறட்பாவில் தழுவுதல் என்னும் வினையாக ஆளப்பட்டுள்ளது. இவ்வாறு காமத்துப்பாலில் பல குறட்பாக்களிலும் வினையாக இயல்கின்றது.
திருக்குளின் பெருமைகளுள் அதன் சொல்லாட்சியும் நடை நலனும் முதன்மையானவை. அதனால் பால், அதிகாரம் ஆகிய ஒவ்வொரு சூழலையும் நோக்கிச் சொல்லின் கருத்தையறியலாம். சூழல் பொருண்மை திருக்குறளின் கருத்தறிதலுக்கு அடிப்படையாகின்றது.
பயன்பட்டவை
இணையதளத் தரவுகள்
**
Comments
Post a Comment