தொல்காப்பியம் -செய்யுளுறுப்பு: பயன்பொருண்மை நோக்கு

. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

உலக இலக்கணத் தளத்தில் தொல்காப்பியத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு; அவற்றுள் பொருளதிகாரமும் ஒன்றாகும். இலக்கிய வகைமை, பாடுபொருள், வடிவம், முருகியல்உணர்ச்சிகள், சொல் வழக்கு வரையறை போன்றன பொருளதிகாரத்தில் இலக்கணப்படுத்தப்பட்டுள்ளன. இலக்கிய வடிவ அமைப்பியலையும் பொருண்மை இயக்கத்தையும் செய்யுளியல் வகுத்துரைக்கின்றது. செய்யுளியலின் முதல் நூற்பா செய்யுள் (34) உறுப்புகளை அறிமுகப்படுத்த, அவை பின்னர் விரித்துரைக்கப்படுகின்றன. இவற்றுள் ஒன்று பயன் என்பதாகும்.

பயன்:

           ஒன்றால் விளைகின்ற பேற்றைப் பயன் என்று குறிக்கின்றனர். மனிதனின் ஒவ்வோர் எண்ணமும் பேச்சும் செயலும் தனி மனிதனுக்கும் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் நற்பேறாகவேண்டும். இவ்வாறே மானுட மேன்மைக்காக மனிதப் பற்றாளர்கள் ஆக்குகின்ற இலக்கியங்களும் இயங்கலாம். இலக்கியவியல் கலைச்சொல்லான பயனைத் தொல்காப்பியர்,

            இதுநனி பயக்கும் இதனால் என்னும்

            தொகைநிலைக் கிளவி பயன் எனப்படுமே ( நூற்பா 1462 )

என்று விளக்கியுள்ளார். மேலோட்டமாக நோக்கும்போதுஇதனால் இவ்வாறு இவ்வளவு பேறுகிட்டும் என்று இது இலக்கியப் பயனைச் சுட்டுவதாகத் தோன்றும். ஆனால் பொருண்மையியல் அணுகுமுறையில், இந் நூற்பாவிலுள்ள தொகைநிலைக் கிளவி என்னும் சிறப்புத் தொடரை நோக்கும்போது நுண்பொருள் புதைந்திருப்பதை வெளிப்படுத்தமுடியும்.  

Ø  படைப்பாளனோடு நுகர்வோனையும் மையமிட்டதாகப் படைப்பு இயலவேண்டும்.

Ø  படைப்பின் ஒவ்வொரு கூறிலும் மானுட மேன்மைக்கான கருத்துப் புதைந்திருக்கவேண்டும்

Ø  சொன்னதிலிருந்து விளம்ப விரும்புவதை / படைப்பின் அடிக்கருத்தை / வாசகனுக்கு உணர்த்த விழைவதை இலக்கியம் தெளிவாக உணர்த்தலாம். இவண் தொல்காப்பியம் சுட்டுகின்ற உள்ளுறை; இறைச்சி;  அன்மொழித்தொகை;  ஒழியிசை எச்சம்;  அறத்தொடு நிற்றல் ஆகிய இலக்கணச் செய்திகளை ஒப்பலாம். மேலும், மரபியலில் நூலாக்க/ நுகர்வு மரபை இலக்கணப்படுத்தும்போது,

                     சொல்லிய அல்ல பிற அவண் வரினும்

                      சொல்லிய வகையால் சுருங்க நாடி

                      மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு

                      இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்

                      நுனித்தகு புலவர் கூறிய நூலே ( நூற்பா 1610 )

என்று தொல்காப்பியம் கருதுவதை இவண் எண்ணலாம். ஒரு கூற்றில் அனைத்தயும் சொல்லாடாவிட்டாலும் கூற முயல்வதை உணர்வது சீரிய பொறுப்பான நுகர்வு முயல்வாகும்.

                   பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
                   சால மிகுத்துப் பெயின்  (குறட்பா 475 ) 

என்னும் குறட்பாவில் கூட்டு வலிமை  புலக்காட்சிப்படுத்தப்பட்டு நுகர்வானுக்குப் படைப்பாளன் உணர்த்த  விழைகின்ற கூட்டு வலிமையின் வீச்சு உள்ளுறைகின்ற செய்தியாக அமைகின்றது.

           எனவே பயன் என்னும் கலைச்சொல்லால் தொல்காப்பியம் இலக்கிய நுகர்வு மரபை விளக்குவது அறியலாகின்றது. இலக்கியப் படைப்பும்  வாசிப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகின்றன; இந்த இரண்டும் ஒத்தியங்குபோது அனைவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ மானுடம் வெல்லும்.

                            நன்றி : இணையத் தரவுகள்

                                  ******

 

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு

தமிழியலாய்வு