பெரியசாமித் தூரனின் ’ஹோமா’ உருவகம்
ப.கொழந்தசாமி, அரசினர்
ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
தமிழுக்குத்
தொண்டு செய்வோன் சாவதில்லை;
பூதவுடல் மறைந்தாலும் புகழுடம்பு நிலைத்திருக்கும்; சீரிய படைப்புகள் மக்களால் சீராகப் போற்றப்படும். அம்
முறையில் பாராட்டத்தக்க பன்முகப் பெருமைகளையும் பங்களிப்புகளையும் வாய்ப்பாக்கியர்
பெரியசாமித் தூரன் (1908-1987) . ஆசிரியர்,
சிறாரிய / கொங்கு வட்டாரவழக்குப் படைப்பாளர்,
இசைவாணர், மொழிபெயர்ப்பாளர், கலைக்களஞ்சியப் பதிப்பர் போன்ற தளங்களில் மேன்மையாக இயங்கித் தமிழுக்கு ஆக்கங்களை
அள்ளித் தந்தவர். இவரது படைப்பாளுமை பாராட்டுகளையும் விருதுகளையும்
வென்றது. இத்தகைய திறனாளர்/ நலவேட்பாளர்
மேலே பற என்னும் தலைப்பிலான பாடலில் ஹோமா
என்னும் கற்பனைப் பறவையை, மக்களை / இளைஞர்களை
ஊக்குவிக்க உருவகமாகப் படைத்துள்ளதை விண்டுரைப்பத்தாக இக் குறிப்புரை இயல்கின்றது.
‘ஹோமா’
பறவை:
ஒவ்வொரு பண்பாட்டிலும் சில
உயிரினங்கள் / பறவைகள் கருத்துவிளக்க உருவங்களாக அமைந்துள்ளன. அன்னம்,
காக்கை, மஞ்சள் போன்றவை தமிழ்ப் பண்பாட்டில் பிரித்தறிதல்,
கூட்டுறவு, மங்கலம் ஆகிய கருத்துவிளக்கப் பணியில்
ஈடுபடுத்தப்படுகின்றன. இவற்றைப் படைப்பாளர்கள் பொருத்தமாக ஆண்டு
வாசகனின் புரிதிறனை வளப்படுத்துகின்றனர். அம் முறையில் தூரன்
ஹோமா பறவையை மனித மனத்தின் ஊக்க சக்தியாக உருவகப்படுத்தியுள்ளார்.

படம் : உஸ்பெகிஸ்தானின் புகாரா நாதிர் திவான்-பேகி
மதரஸாவின் போர்ட்டலில்
உள்ள புராண ஹோமா பறவை வடிவ மொசைக் கல் (https://en.wikipedia.org/wiki/Huma_bird)
இப் பறவை தரையில் இறங்கமல் ஓய்வின்றி உயரே பறப்பதாகவும், தீயில் பொசுங்கினாலும் மீண்டும் உயிர்பெறும் ஆற்றலது என்றும் கட்டற்ற மின்களஞ்சியமான விக்கிபீடியா
(https://en.wikipedia.org/ wiki/Huma_bird ) குறிப்பிடுகின்றது.
மேலே பற என்னும் தலைப்பிலான இந்தப்
பாவின் இறுதியில்,
ஹோமா என்பது மேல் நோக்கியே பறக்கும்
ஒரு கற்பனைப் பறவை.
மேல் நோக்கிப் பறக்கும்போதே அது முட்டையிடும். முட்டைகள் பூமியில் விழாமல் வானிலேயே
குஞ்சுகளாக மாறி அவையும் மேல் நோக்கியே பறக்கும். இது ஞானிகளின்
கற்பனைப் பறவை
என்னும்
குறிப்புரையைத் தந்து இருண்மையை நீக்கித் தெளிவாக்குகின்றார். இது வாசகனை மையமிட்ட
விளக்கப் பணியாகும். இதனால் ஹோமா கற்பனைப் பறவை என்பதை
வாசகன் தெளிகின்றார். இந்தக் கற்பனைப் பறவைக்கான பண்புகள் மனித மனத்திற்கும் பொருந்துவதால் உருவகம்
சிறப்படைகின்றது.
மேலே
பற:
இளந்தமிழா ( ஆறாம் பதிப்பு 1980
) என்னும் பாத் தொகுப்பு நூலின் 28ஆவது பாடல் மேலே
பற [ ப. 75 ] என்னும் தலைப்பிலானதாகும்.
படைப்பாளர் தன் மனத்திற்குக் கூறுமாறு இது இயல்கின்றது. தொல்பழங்காலத்திலிருந்து இம் மரபு
இலக்கிய ஆக்கத்தில் பங்குபெறுகின்றது.
மனமே
கற்பனைப் பாராசாரி
மீதுவர்ந்து
வானிலே பற
!
மேலே மேலே பற
!
என்று
தொடங்கி, உயர்வாக எண்ணுக; வாழ்க்கையை வளமாக்குக; உயிரிரக்கங் கொள்க; நன்னெறி போற்றுக என்றவாறு வலியுறுத்தி,
முன்னேறத் தூண்டும்போது,
நீ ஹோமாவைப் போல் மேல் நோக்கியே பற!
என்று
அறிவுறுத்தி, இறுதியாக,
ஆமாம் மனமே
நீ ஹோமா!
என்று
அழுத்தமாகக் கூறிப் பாடலை நிறைவுறுத்துகின்றார். இப் பாடல் உருவகப் பாவாக, ஆன்மீக/ தத்துவச் சாயல் கொண்டதாக உளவியல் நுட்பம் சான்றதாக, சமூக
நலனை வலியுறுத்துவதாக இயல்கின்றது. இத்தகைய பாடல்கள் தனி மனித
வளமைக்கும் உலக மேன்மைக்கும் வாய்ப்பாவன. இதனால் பெரியசாமித்
தூரனை இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளுள் ஒருவராக ஏற்கலாம்.
துணைநின்றவை
பெ. தூரன்
1980( ஆறாம் பதிப்பு), இளந்தமிழா, சென்னை; வானதி பதிப்பகம்.
விக்கிபீடியா
மி களஞ்சியம் & இணையத் தரவுகள்
*****
Comments
Post a Comment