பெரியசாமித் தூரனின் ’அழைப்பு’
ப.கொழந்தசாமி, அரசினர்
ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை;
சீரிய படைப்புகள் மக்களால் சீராகப் போற்றப்படும். அம் முறையில் பாராட்டத்தக்க பன்முகப் பெருமைகளையும் பங்களிப்புகளையும் வாய்ப்பாக்கியர்
பெரியசாமித் தூரன் (1908-1987) . ஆசிரியர்,
சிறாரிய / கொங்கு வட்டாரவழக்குப் படைப்பாளர்,
இசைவாணர், மொழிபெயர்ப்பாளர், கலைக்களஞ்சியப் பதிப்பர் போன்ற தளங்களில் மேன்மையாக இயங்கித் தமிழுக்கு ஆக்கங்களை
அள்ளித் தந்தவர். இவரது படைப்பாளுமை பாராட்டுகளையும் விருதுகளையும்
வென்றது. இத்தகைய திறனாளர்/ உலகநலவேட்பாளர் இளைஞர்களுக்குப் பல அறிவுரைகளை நல்கி விழிப்புணர்வூட்டியுள்ளார்.
இளமை:
பாரதத் திருநாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு
பங்கினர் இளைஞர்கள். அதோடு வாழ்க்கையின் வளர்ச்சிக்கான
அடித்தளத்தைக் கட்டமைக்கின்ற தொடக்ககாலப் பருவமாகவும், வாழ்க்கையை வளப்படுத்த முனைகின்ற முயற்சிப் பருவமாகவும், கனவுகள் கற்பனைகளோடு இல்லற வாழ்வை ஆக்கி இன்புறுகின்ற காலகட்டமாகவும் குமரப்
பருவம் அமைகின்றது. இந்தப் பருவத்தில் உடலியல், உளவியல், சமூகவியல், அறவியல்,
திறனியல் ஆகிய தளங்களில் இளைஞர்களை ஆற்றுப்படுத்தினால் மேன்மை வசப்படும்.
இதைப் படைப்பாளர்கள் உணர்ந்து ,காலந்தோறும் இலக்கியப்
பனுவல்களில் இளைஞர் நலக் கருத்துகளை / அறவுரைகளை அறைந்துள்ளனர்.
பொன்முடியார் ஒவ்வொரு பிரிவினரின் கடமைகளை வரையறுத்துக் கூறுகையில்,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
( புறநானூறு பா 312 )
என்று சுட்டுகின்றார்.
இதை அற இலக்கியங்களும் நெறி நூல்களும் செறிவாக எடுத்துரைத்துள்ளன.
இவ் வரிசையில் பத்துத் தொகுதிகளில் குழந்தைகள் கலைக்களஞ்சியத்
தொகுதிகளைத் தொகுத்தளித்தும், குமரப் பருவம் (1954) போன்ற உளவியல் நூல்களை வெளியிட்டும், இலக்கியம் வாழ்க்கையை
வளமுறுத்தவேண்டும் என்னும் சீரிய கொள்கையுடன் பாப் புனைந்தும் தூரன் வளரிளமைப்
பருவத்தினரின் வளமைக்கு வழிவகுத்துள்ளார்.
அழைப்பு :
இளந்தமிழா பா நூலில் பலவிடங்களில் இளைஞர்களை விளித்து அறவுரைகளை
ஊட்டிய தூரன், இந் நூலின் 41ஆம் தலைப்பில் ( ப.97 ) அமையும்
அழைப்பு என்னும் பாடலின் தொடக்கத்தில்,
இளைஞனே எழுந்து நில்!
தளையெல்லாம் இன்றே தகர்த்திடு!
என்று முழக்கமிட்டு,
தொடர்ந்து,
இன்பமனைத்தும் கொணர்ந்திடத் துணிந்திடு!
புதுமையிற் புதுமை செய்!
பழமையின் உயர்வையும் அறிந்திடு!
என்றெல்லாம் தட்டியெழுப்பி,
நிறைவாக
ஞாலம் இன்புறவே நன்மை செய் !
காலம் வருமெனக் காத்திருப்பவன் செய்யான்
இன்றே செய்திட இன்னே செய்திட
இளைஞனே எழுந்து நில்!
என்று வீரியக் குரலில் முடிக்கின்றார்.
இப் பாவைப் படிக்கின்ற இளையோர் புத்துணர்ச்சியும் வீறுணர்வும் பெற்றுத்
தொல்காப்பிய வாகைத்திணை வகுத்துரைத்த வெற்றியாளர்களாக மிளிர்வர். இத்தகைய வீறுணர்ச்சிப் பனுவல்களை எளிமையாக/ இனிமையாக
இளையோர்க்கு எடுத்துச்செல்ல / சொல்ல முனைவோமாக!
துணைநின்றவை
பெ. தூரன் 1980( ஆறாம் பதிப்பு), இளந்தமிழா, சென்னை; வானதி பதிப்பகம்.
விக்கிபீடியா மின் களஞ்சியம் & இணையத் தரவுகள்.
|
***** |
Comments
Post a Comment