இல்லாள் மாண்பு : தொல்காப்பிய விழுமியம்

`           ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

இலக்கியங்களோடு இலக்கண நூல்களும் நிலைபேறுடைய மானிட மதிப்புகளை விண்டுரைத்து மானுட வெற்றிக்கு வாய்ப்பாகின்றன. இவற்றை அறிந்து வாய்ப்பாக்கினால் தனி மனிதனும் ஒட்டுமொத்த வையகமும் சிறக்கலாம்.  மூன்று அதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் இலக்கியத் திறனாய்வாக இயலினும், அதில் ஆங்காங்கு அறையப்பட்டுள் அறக் கருத்துகள்/ விழுமியங்கள் ஊன்றி உன்னத்தக்கன. அந் நிலையில் மெய்ப்பாட்டியலில் தலைவியின் பண்பாட்டுச் சீர்மையான இல்லற வளமைக்கான மனவளக் கருத்துகளைப் பட்டியலிடுவதாக,

தெய்வம் அஞ்சல்; புரை அறம் தெளிதல்;

இல்லது காய்தல்;  உள்ளது உவர்த்தல்;

புணர்ந்துழி உண்மை ; பொழுது மறுப்பு ஆக்கம்;

அருள் மிக உடைமை ;அன்பு தொக நிற்றல்;

பிரிவு ஆற்றாமை ; மறைந்தவை உரைத்த                        

புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇ

சிறந்த பத்தும் செப்பிய பொருளே (நூற்பா 1218)

என்னும் நூற்பா அமைந்துள்ளது. இது காதலித்து மணந்த அகப் பொருள் தலைவியின் கற்புக் கால உளவியலை விளக்குவதாக இருப்பினும், இதில் வகுத்துரைக்கப்பட்டுள்ள அறநெறிகள் உலக வாழ்க்கையையும் ,இல்லாளின் மதிப்பபையும் வளத்தையும் மிகுவிப்பனவாக அறியப்படவேண்டும். சீரியதைப் பயன்கொண்டு சிறந்தோங்கல் அறிவுடையார் கடனே.

1.       தெய்வத்திற்கு அஞ்சல்

2.       மேலான, மெச்சத்தக்க இல்லற வாழ்க்கை

3.       கணவன் மீது அளவற்ற அன்பு

4.       கணவனின் பெருந்தன்மையை மதித்தல்

5.       புணர்வு மகிழ்ச்சி

6.       திட்டமிட்ட நற்செயல்கள் / அறநெறி

7.       உயிரிரக்கம் / கடைமை உணர்வு

8.       சுற்றம் ஓம்பல்

9.       தலைவன் பிரிவால் ஏங்கல்

10.    குடும்பத்துக்குப் பழிச் சொல் வராமல் காத்தல்

என்று வகுத்துரைக்கப்பட்டுள்ளவை என்றைக்கும் இல்லற வாழ்வை வனப்பாக்குபவை. இவற்றை உளங்கொண்டு திருக்குறள் முதலிய அற இலக்கியங்களும் இன்றைய திரையிசைப் பாக்களும் இல்லற விழுமியங்களை விளக்குகின்றன. தொல்காப்பியம் இன்றைக்கும் என்றைக்கும் தாய்மைச் சிறப்போடு வாய்ப்பாவதைப் போற்றலாம்.

                                            பயன்பட்டது

   தமிழண்ணல் (உரை.) 2008,  தொல்காப்பியம் கருத்துரை, மதுரை; மீனாட்சி புத்தக நிலையம்.              .

                                 ************

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு