அய்யம் : பசிப்பிணி போக்கிப் பல்லுயிரோம்புகின்ற விழுமியம்
ப.
கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
தமிழ்ப் பண்பாட்டு மரபில்
ஈதல், பசிப்பிணி போக்கல், விருந்தோம்பல், ஆறுதல் கூறல் ஆகிய அற விழுமியங்கள் தொன்றுதொட்டு வலியுறுத்தப்படுகின்றன.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நெறி நூல்கள் என்று அனைத்தும் ஈதலையும் இசைபட வாழ்தலையும் வகுத்துரைக்கின்றன.
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தோம்புவதோடு, முன்பின் அறியாத புதியவர்களுக்கும் பறவை / கால்நடை ஆகியவற்றிற்கும்
பசியாற உணவிட்டுப் பல்லுயிரோம்பவேண்டும். இதை வலியுறுத்த,
பசிப்பிணி போக்கலை அனைவரும் வாய்ப்பாக்கக் காப்பியங்களில் மணிமேகலையின்
அமுதசுரபி, பெரியபுராணத்தில் காரைக்காலம்மை, சிறுத்தொண்டர் போன்ற கருத்தாக்கங்கள் ஏற்றப்பட்டுள்ளன. ஆத்திசூடியில் (அடி 09) அவ்வையார்
அய்யம் இட்டு உண் என்று வேண்டுகின்றார். இதில் அய்யம்
என்னும் பெயர்ச் சொல் ஊன்றி உன்னத்தக்கது; சொற்பொருளாய்வுக்கு
வாய்ப்பாகின்றது. தமிழ்ச் சொற்பொருள் வரலாற்றில், தெளிவின்மை ; களவுக்கால அகப்பொருள் மெய்ப்பாடு போன்ற கருத்தில் பயில்கின்ற இச் சொல் இவண் பசியாற்றுகின்ற உணவு என்னும்
சிறப்புப் பொருளில், அறவியல் கலைச்சொல்லாகச் சிறப்புப் பொருளில்
இயல்கின்றது. இவ் அடியின் உண் என்னும்
வினை அய்யம் என்னும் எழுவாயான பெயர்ச்சொல்லை உணவு என்று உறுதிப்படுத்துகின்றது.
இதனால் பசிப்பிணி போக்கிப் பல்லுயிரோம்புகின்ற விழுமியமாக இச்
சொல்லை அடையாளப்படுத்தலாம்.
பயன்பட்டவை
இணையத் தரவுகள்
****
Comments
Post a Comment