தொல்காப்பியத்தில் மாணும் மானும் – ஒப்பொலிச் சொற்பொருள்

         ப.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

    விரிவான தரவுகளின் அடிப்படையில் தமிழ் மொழியின் இயங்கியல் & இலக்கிய அமைப்பியல் ஆகியவற்றை ஆய்ந்துரைக்கின்ற தொல்காப்பியம், அகராதிப் பொருண்மையியல் எனப்படுகின்ற சொல்லியல் ஆய்வுக் களமாகத் திகழ்கின்றது. அந் நிலையில் மாண் / மான் ஆகிய ஒப்பொலிச் சொற்கள் தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ளவாற்றை விளம்புவதாக இக் கட்டுரை இயல்கின்றது. இதனால் சொற்களுக்கு முறையாகப் பொருளறிய வாய்ப்பாகும்.

ஒப்பொலிச் சொல்:

சொற்பொருண்மையியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் ஒலியொப்புமை உடையனவாகும்போது அவை ஒப்பொலிச் சொற்கள் எனப்படுகின்றன. ஒப்பொலிச் சொற்கள் (homophone words) ஒருமித்த ஒலி உடையனவாகவும், வெவ்வேறு பொருள் கொண்டனவாகவும் இருப்பதால், பேச்சுப் பயன்பாட்டில் குழப்புகின்ற  சொற்களாகும். இவற்றை முறையாகப் பொருளறியவேண்டும். இத்தகைய சொற்கள் அனைத்து மொழிகளிலும் இயல்கின்றன.

        சான்று : மரம் / மறம் ; கலம் / களம் – two / too

இத்தகைய மாண் / மான் ஆகிய ஒப்பொலிச் சொற்களைத் தொல்காப்பியம் ஆண்டுள்ளது. 

தொல்காப்பியத்தில் மாண் / மான் :

  மாண் நலம் தா என…. (நூற்பா 1100 / அடி13 ) = மாட்சி- பெயர்

புறஞ்சொல் மாணாக் கிளவி ( நூற்பா 1221 / அடி 06) = நன்றாதல் – வினை

மேற்கண்ட அடிகளில் மாட்சி என்று பெயராகவும்,  நன்றாதல் என்கின்ற வினையடியாகத் தோன்றிய மாணா என்று ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகவும் பலபொருளொருசொல்லாக , பெயரடையாக‘ மாண்’ ஆளப்பட்டுள்ளது. 

  1440ஆம் நூற்பாவில், பண்ணத்தியோடு  ஒத்தியல்கின்ற பிசி என்னும் வகையை விளக்க, ’மானும்’  என்னும் வினைச்சொல் ஒப்புமையானது என்னும் கருத்தில் இயல்கின்றது.  தொல்காப்பியம் இயற்றப்பட்டபோது தமிழில் மாண் & மான் ஆகிய பொருள் வேறுபாடுடைய ஒப்பொலிச் சொற்கள் வழங்கியதால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இத்தகைய ஒப்பொலிச் சொற்களைக் கண்டு முறையாகப் பொருளுணரவேண்டும். தொல்காப்பியரின் இலக்கணவியல் விளக்கங்களோடு, அவரது சொல்லாட்சி / நடை ஆகியனவும் ஆய்வுத் தரவாகின்றன.

                                     பயன்பட்டவை

ஜெயதேவன், வ. ( பதி. ), 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

இணையதளத் தரவுகள்.

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு