திருக்குறளில் முரி / முறி : ஒப்பொலிப் பொருண்மை

ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

  விளம்பு பொருளால் வீரியமும் நிகழ்தகைமையும் மிக்க வள்ளுவம், பல துறை ஆய்வுக் களமாகவும் திகழ்கின்றது. திருவள்ளுவரின் சீரிய மொழிநடை சொல்லாய்வுக்கு வாய்ப்பாகின்றது. அந் நிலையில் முரி / முறி ஆகிய ஒப்பொலிச் சொற்கள் திருக்குறளில் இயலுமாற்றை எடுத்துரைப்பதாக இக் கட்டுரை இயல்கின்றது. இதனால் சொற்களின் கருத்தையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தையும் தெளிவாறிய வாய்ப்பாகும்.

ஒப்பொலிச் சொல்:

            சொற்பொருண்மையியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் ஒலியொப்புமை உடையனவாகும்போது அவை ஒப்பொலிச் சொற்கள் எனப்படுகின்றன. ஒப்பொலிச் சொற்கள் (homophone words) ஒருமித்த ஒலி உடையனவாகவும், வெவ்வேறு பொருள் கொண்டனவாகவும் இருப்பதால், பேச்சுப் பயன்பாட்டில் குழப்புகின்ற  சொற்களாகும். இவற்றை முறையாகப் பொருளறியவேண்டும். இத்தகைய சொற்கள் அனைத்து மொழிகளிலும் இயல்கின்றன.

        சான்று : மரம் / மறம் ; கலம் / களம் – two / too

இத்தகைய முரி / முறி ஆகிய ஒப்பொலிச் சொற்களைத் திருக்குறள் ஆண்டுள்ளது.

திருக்குறளில் முரி / முறி:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் (குறள் 473)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899 )

ஆகிய குறட்பாக்களில் கெடுதல்/ சிதைதல் என்னும் வினைப் பொருளில் முரி பயில்கின்றது. இச் சொல் இன்றும் வழக்கில் உள்ளது. பின்வரும் பேரகராதிப் பதிவு இவண் நோக்கத்தக்கது.

muri   n. முரி¹-. [T. K. M. Tu.muri.] 1. Piece, bit, half; துண்டு. 2. Broken rice; நொய்யரிசி. குத்திய வரிசி யெல்லா முரியறக்கொழிக்கவாரீர் (தக்கயாகப். 736). 3. Any thing short or dwarfish; முழுதிற் குறைவானது. மக்கண் முரியே (கலித். 94). 4. Scratch, blemish;சிதைவு. (சிலப். 25, 146, அரும்.) 5. Curve, bend;வளைவு. முரியா ரளகத் தடாதகை (திருவிளை. பயகர.8). 6. Written bond. See முறி, 4. Loc. 7. (Mus.)The closing section of a musical composition;இசைப்பாவில் இறுதிப் பகுதி. (சிலப். 6, 35, உரை.)8. The curitakam ( University of Madras  TamilLexicon) https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF

அடுத்து,

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு (குறள் 1113 )

என்னும் குறட்பாவில் தலைவியின் உடலழகின் ஈர்ப்பை, இளமைத் திறத்தை  ’முறி’ என்னும் சினையாகுபெயரால் வண்ணித்துள்ளார். இவண் ‘பாதாதிகேச’ வண்ணனை உன்னத்தக்கது.

          1591ஆம் நூற்பாவின் தொடக்க அடியில் இளந்தளிர் என்னும் கருத்தில் முறி இயல்வதைத் தொல்காப்பியமும் சுட்டியுள்ளது. இவ்வாறு சொற்களின் கருத்தறிந்து இலக்கியத்தைச் சுவைத்தால் தெளிவு வாய்ப்பாகும்.

                                     பயன்பட்டவை

               இணையதளத் தரவுகள்.

                                                       ********

Comments