மார்’ – இலக்கண & பொருண்மையியல் & அறிவியல் ஒப்பு நோக்கு

. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

தமிழ் இலக்கணம் அறிவியல் / காரணகாரிய இயல்புடையது; தரவுகளை நுட்பமாக ஆய்ந்து ஆக்கப்பட்டது. அதனால் இன்றைய அறிவியல் பண்புகள் இலக்கணத்தில் புதைந்துள்ளன. அவற்றுள் பகுபத உறுப்பிலக்கணமும் ஒன்றாகும். மக்களின் மொழிப் பயன்பாட்டையும் இலக்கிய ஆட்சியையும் முறைப்பட நாடி முந்து நூல் கண்டு ஆக்கப்பட்ட விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியமும், இதன் வழி நூலான நன்னூலும் சொற்களின் பொருண்மைக் கூறுகளை, பகுதி, இடைநிலை, இறுதி/ விகுதி என்றவாறு பகுக்கின்றன. இவற்றைப் பொருண்மைக் கூறுகள் என்று பொருண்மையியல் சுட்டுகின்றது. காட்டாக, பேசுகின்றான் என்னும் படர்க்கை ஆண்பால் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றை இலக்கணத்தார், பேசு+கின்று+ ஆன் என்று பகுத்து,

பேசுவினைப் பகுதி [ வினைப் பகுதி ஏவலாக, சொல்லின் தொடக்கமாக இயலும்]

கின்றுநிகழ் கால இடைநிலை 

     [ இடைநிலை = பகுதிக்கும் விகுதிக்கும் இடைநிற்றலான் பெற்ற காரணப் பெயர் ]

ஆன்ஆண்பால் காட்டுகின்ற விகுதி [சொல்லின் இறுதிக் கூறு]

என்று விளக்குவர். சொல்லாக்கத்தின் அடிப்படையான ஒட்டுநிலை இவ்வாறு அமைகின்றது. சில இடங்களில் சாரியை, சந்தி, விகாரம் ஆகியனவும் வரலாம்; ஆனால் அவற்றிற்குப் பொருண்மை மதிப்பு இல்லை; ஒலி இயைபு மட்டும் உண்டு.

             பொருண்மையியலில் மேற்கண்ட பேசுகின்றான் என்பதன் சொல்லமைப்புக் கூறுகளை,    என்ன? ; எப்போது ? ; யார் என்று சுட்டுகின்றனர். அதாவது பேசுதல் ஆகிய செயலை இப்போது ஓர் ஆண் நிகழ்த்துகின்றார் என்று இயைக்கின்றனர். இவ்வாறான ஒட்டுநிலை அமைப்பு விளக்கத்தில்மார்என்கின்ற பன்மை விகுதியும் ஒன்றாகும்.

                               ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்

                              மாரைக் கிளவி உளப்பட மூன்றும்

                              நேரத் தோன்றும் பலரறி சொல்லே (நூற்பா 490)

 

                              மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
                              காலக் கிளவியொடு முடியும் என்ப (நூற்பா 692)
 
ஆகிய நூற்பாக்களில் பலர்பால் ஈறாக மார் இயல்வதைத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. நன்னூலும் இத்தகைய இலக்கணத்தை வழிமொழிகின்றது. தொல்காப்பியத்தால் உணர்த்தப்பட்ட இச் சொல்லாக்க/ தொடரியல் இயங்கியல் இன்றைய பேச்சு வழக்கிலும் பயில்வதை,
அண்ணன்மார்; ஈர்க்குமார்
போன்ற பேச்சு வழக்காறுகளால்  தெளியலாம்இவற்றுள், ஈர்க்குமார் என்பது வீடு பெருக்க வாய்ப்பாகின்ற துடைப்பத்தைக் குறிப்பதாகும். தென்னை ஓலையிலுள்ள குச்சிகளை ஈர்க்கு என்று அழைப்பர். இத்தகைய ஈர்க்குகளைக் கட்டாகத் தொகுத்துக் கட்டி, அந்தத் தொகுப்பை ஈர்க்குமார் என்கின்றனர். இங்கு மார் என்பது பன்மையை / தொகுப்பைச் சுட்டுவதாகும்.
கணிதத்தில் :
               அறிவியலின் தாய் என்று போற்றப்படுகின்ற கணிதத்தில்கணம்என்று ஒன்றின் திரட்சியை / தொகுப்பைக் குறிக்கின்றனர். 
                                         காட்டு -பூக்களின் கணம்
இதனோடுமார்இறுதியை ஒப்பிட்டு நோக்கித் தெளியலாம்.
 
இயற்பியலில்/ வேதியியலில் :
               அணு, அணுத் திரட்சி, மூலக் கூற்று இயற்பியல்/ வேதியியல்  ஆகிவற்றோடு மார்இறுதியை ஒப்பிட்டு நோக்கித் தெளியலாம். நீரில் நீர்மமும்உயிர்வளியும் முறைப்படி கூடுவதைக் கருதலாம். மின்சாரத்தில் நேர்மமும் எதிர்மமும் இயைந்து இயங்குவதை உணரலாம்.
               இலக்கணம் என்னும் அறிவாராய்ச்சியோடு, தொடர்புடைய மொழியியல்/ பொருண்மையியல்/ அறிவியல் கருத்துகளை இயைத்து நோக்கும்போது தெளிவு சிறப்பதோடு , இலக்கணத்தின் சீர்மையும் புலனாகும். இதனால் தொல்காப்பியம் மக்கள் இலக்கணமாக இறவாப் புகழ்கொண்டு மிளிர்வதை ஏற்கலாம்..
                                                                       *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு