கூட்டு வலிமையை எடுத்துரைக்கும் 475ஆம் குறட்பாவின் அணிநலம்
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
திருக்குறளின் கருத்தை அறிவதற்குச் சொல்லியல்,
தொடரியல், இலக்கியவியல் தளங்களில் நுட்பமான அணுகுமுறை தேவைப்படுகின்றது. இதற்கு உரைகள்
துணையாகும். முருகியலுக்காக மட்டுமல்லாமல் கருத்து விளக்கத்திற்காகவும் அணி அமைக்கப்படுகின்றது.
அம் முறையில்,
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (475)
என்னும் குறட்பாவை அணுகலாம். இலக்கியத்தில் படைப்பாளர் வெளிப்படையாகச் சொன்னதும் அதன்மூலம் குறிப்பாகச் சொல்ல விழைவதும் அமையக்கூடும்.
இதைத் தமிழ் இலக்கணங்கள் ஒட்டணி
/ பிறிதுமொழிதலணி / நுவலாநுவற்சி என்னும்
அணியியல் கலைச்சொற்களால் சுட்டுகின்றன. இத்தகைய ஒட்டணி மேற்படி
குறட்பாவில் பயில்கின்றது. அரசியலில் வலியறிதல் குறித்து உணர்த்துகின்ற திருவள்ளுவர்
கூட்டு வலிமையை இக் குறட்பாவில் குறிப்பிடுகின்றார். தம்மைவிட எளியோராயினும்,
பகைவர்கள் ஒன்றிணைந்தால் மிகு வலிமை பெற்று வெல்வர் என்பது இக் குறட்பாவின் விளம்பலாகும்.
ஆனால் உருக்காட்சி மூலமாக இதைச் சுட்டுகின்றார். எஃகினால் ஆன வண்டியின் அச்சானாலும்,
மெலிதான மயில் தோகையை வண்டியில் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் சுமை தாங்காமல் அச்சு முறிந்துவிடும்
என்பது இக் குறட்பாவில் உள்ள செய்தியாகும். ஆனால், இங்கு வண்டியோ, சுமையோ, அச்சோ பேசுபொருள்
அன்று. கூட்டு வலிமையே எடுத்துரைக்கப்படுகின்றது. இதற்கு வாய்ப்பாக ஒட்டணி அமைகின்றது.
மேலும் சாகாட்டின் அச்சை முதலுக்கு ஏற்றியும், சாகாடும் என்பதிலுள்ள உம்
மூலம் மயில் தோகையின் எளிமையும், சகடத்தின் வலிமையும் உணர்த்தப்படுகின்றன. பண்டத்தின் கூட்டு வலிமை சாலமிகுத்து என்னும்
ஒருபொருள் குறிக்கும் இரண்டு சொற்களால் சுட்டப்படுகின்றது.
இவ்வாறு குறட்பாக்களை நுட்பமாக அணுகிக் கருத்துணர்தல் மேன்மையானது.
*****
Comments
Post a Comment