’செங்கோன்மை சிறக்க’ – 556ஆம் குறட்பாத்
தொடர்ப் பொருண்மை
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
நாடோடியாகத் திரிந்த மனிதன் ஆற்றங்கரையில்
சேரி அமைத்தபின் உடைமை வேட்கையும் கற்பு முறைமையும் ஏற்பட்டதை மானுடவியல் எடுத்துரைக்கின்றது.
இவற்றைக் கண்காணிக்கவும் மக்களைக் காக்கவும்
இறை /அரசு தோற்றுவிக்கப்பட்டது. மக்கள்
நலனை மையமிட்டுச் ’செங்கோன்மை’ வாய்ந்த
அரசுகள் ஆண்டபோது அரண்மனை/ கோவில் , வெண்கொற்றக் குடை, செங்கோல், காவல் மரம், கொடி
போல்வன அரசச் சின்னங்களாக அமைக்கப்பட்டன. இதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றாலும்
அறியலாம். செங்கோன்மை, மன்னர்க்கும் மக்களுக்கும் நலம்பயக்கவேண்டியதைக் கொடுங்கோன்மை அதிகாரத்தில் வலியுறுத்தும் வள்ளுவம்,
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி (556 )
என்னும் குறளில், மக்கள் நலனை மையமிட்ட சீரிய/
நேரிய ஆட்சிமுறை அரசுக்குப் புகழையும் நிலைபேற்றையும் உண்டாக்கும். இல்லாவிட்டால் இகழ்ச்சியும்
வீழ்ச்சியும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றது. இதில் இரண்டு தொடர்கள் இயல்கின்றன; இவற்றை
இல்லாவிட்டால் [செய்யாவிடின்
] என்னும் தொடரிணைப்பான் இணைக்கின்றது. இவை உணர்த்துகின்ற தெளிபொருளாக ’செங்கோன்மை சிறக்க’ என்னும் கருத்தை, குறட்பாவின் மூன்றாவது
தொடராக அமைத்து, சொன்னதும் சொல்லவிழைந்ததும் என்னும் முறையில் தெளியலாம்.
மேலும் செங்கோன்மை என்னும் தொடரை மூன்றாம் வேற்றுமைத் தொகையாகக் கொணடு செங்கோன்மையால்
என்று விரிக்கலாம். மன் என்னும் பழந்தமிழ் வினைச்சொல்லுக்கு நிலைபேறு
/ அழிவின்மை / புகழ் மங்காமை என்பது கருத்தாகும். ஒளி என்னும் ஒப்புருப் பெயருக்கு ’தான்
வாழுங் காலத்திலேயே ஆன்றோராலும் மக்களாலும் விரும்பப்படுதலும் மதித்துப் போற்றப்படுதலும்’
என்று கருத்துரைக்கலாம். ஆகவே ஆட்சி மேன்மையை வலியுறுத்துகின்ற இக் குறட்பா, மூன்று
தொடர்களில் குடிமையியல் / ஆட்சியியல் விழுமியத்தை எடுத்துரைக்கின்றது. இங்ஙனம் தொடர்ப் பொருண்மை நோக்கில் குறட்பாக்களை அணுகினால்
தெளிவு சிறக்கும்.
********
Comments
Post a Comment