860ஆம் குறட்பாவின் தொடரமைப்பு
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
தொடரை மையமிட்டு இலக்கணம் இயம்புகின்ற தொல்காப்பியம் ஆங்காங்கே தமிழ்த் தொடரியல் செய்திகளையும் வகுத்துரைத்துள்ளது.
ஒற்று மிகுதல், வேற்றுமை, எச்சங்கள், இடைச்சொல், உரிச்சொல்,
தொகை, எழுவாய் பயனிலை இயைபு, மரபியலின் சொல் வழக்கு வரையறை போல்வன தொடரியல் சார்ந்தவை; பொருள்கோள், யாப்பு, குறை போல்வன சிறப்பாகச் செய்யுளுக்குரியவை. இதனடிப்படையில் இலக்கியத்தை அணுகினால் மயக்கம் ஏற்படாமல் புரிதிறன்
சிறக்கும். அதோடு பல கட்டுப்பாடுகளால் பொது அமைப்பிலிருந்து செய்யுளின்
தொடரமைப்பு வேறுபடுகின்றது. இதை நோக்கிப் பாத் தொடரை முறையாக அறிந்துகொள்ளவேண்டும். அம்
முறையில் 860ஆம் திருக்குறளின் தொடரமைப்பை நோக்கலாம்.
ஒரு குறட்பாவில் ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட
தொடர்களோ அமைந்திருக்கலாம்; தொடரின் உறுப்புச் சொற்கள் எழுத்துக் குறைவுடன் முறைமாறி இயலலாம். அந்
நிலையில்,
இகலானாம் இன்னாத எல்லாம்; நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு (860) என்னும் குறட்பாவில்,
ü வெறுப்புப் பகையுணர்வால் தீயன எல்லாம் உண்டாகும்.
ü
இன்முக நட்புணர்வால் மகிழ்வான மனநிறைவு வாய்க்கும்.
என்னும் இரண்டு தொடர்கள் உள்ளன. அதாவது இதனால்
இது விளையும் என்னும் வாய்பாட்டில், எண்ண விளைவுக் கொள்கை இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இரண்டு தொடர்களுக்கும் ஆம் [ஆகும்> ஆம்; இடைக்குறை] வினையாக
இயல்கின்றது. வாசகர் நுணுகி ஆராய்ந்து, உறுப்புச்
சொற்களை நிரப்பி உரைநடை அமைப்பில் அமைத்துப் பொருளுணரலாம். இத்
தொடர்கள் பகையுணர்வின் தீமையையும் நட்புணர்வின்
பயனையும் ஒப்பிட்டு உரைப்பதைச் சுவைத்து வெறுப்புப் பகையுணர்வைத்
தவிர்த்து, இன்முகத்துடன் நட்பாடி நலம் பெருக்கலாம். இந் நெறியில் குறட்பாக்களை அணுகித் தெளியலாம்.
*****
Comments
Post a Comment