கொங்குநாட்டு அருள்மலை நொண்டி நாடகத்தில் முருகன்
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி.
தொல்பழங்காலந்தொட்டுத்
தமிழர்களின் வழிபடுகடவுளாகத் திகழ்பவர் முருகன். இன்றுவரை இந் நிலை தொடர்ந்து மென்மேலும்
வளர்கின்றது. முத்தமிழ் இலக்கியப் பாடுபொருளாக முருகன் விளங்குகின்றான்.
முருகு + அன் > முருகன். கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாம் இயற்கை
அழகு + மாறா இளமை + அடியோரைக் காக்கின்ற
வீரம் + அளவிலாத அருளுடைமை ஆகிய நற்பண்புகளின் கூட்டாக அமைவது
‘முருகு’ என்னும் பழந்தமிழ்ப் பெயர்ச் சொல்லாகும்.
இப் பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவன் முருகன். அறுபடைவீடு கொண்டு குன்றுதோறாடுகின்ற குமரன் ஆவினன்குடி / பழனி மலையில் அருளாட்சி ஆற்றிவருகின்றார். இவரை முருகன்,
தண்டாயுதபாணி, வேலாயுதன், முத்துக்குமரன், சின்னச்சாமி, கந்தன்
போன்ற பெயர்களால் அழைத்து வழிபடுகின்றனர்.
பெருமைமிகு பழனியைப் புலவர் பலரும் போற்றிப் பாடித் திளைக்கிறனர்.
ஆசிரியர், சிறாரிய / கொங்கு
வட்டாரவழக்குப் படைப்பாளர், இசைவாணர், மொழிபெயர்ப்பாளர்,
கலைக்களஞ்சியப் பதிப்பர் போன்ற தளங்களில் மேன்மையாக இயங்கித் தமிழுக்கு
ஆக்கங்களை அள்ளித் தந்த பெரியசாமித் தூரன் (1908-1987) இசைப் பாடல்களால் பழனி முருகனையும் பிற தெய்வங்களையும் போற்றி வாழ்த்திப் பாடியுள்ளார். பன்முகப் பெருமையரான தூரன் பதிப்பித்த அருள்மலை
நொண்டி நாடகத்தில் காணலாகும்
முருகனின் பெயர்கள் இக் கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகின்றன.
அருள்மலை
நொண்டி நாடகத்தில் முருகன்:
தனது இசைப்பாக்களில் முருகனை
மனமுருகிப் பெரிதும் போற்றி வழிபட்ட தூரன் பதிப்பித்த அருள்மலை நொண்டி நாடகத்தின் இறுதியில்
இயல்கின்ற முருகப் போற்றி ஆழ்ந்து அனுபவிக்கத்தக்கதாகும். ஓருருவம்,
ஒரு நாமம் இல்லானை ஆயிரம் பெயரால் வாழ்த்தித் தெள்ளேணம் கொட்டுவது சைவ
மரபு. கிபி 17ஆம் நூற்றாண்டில் ஈரோடு திங்களூருக்கு
அருகிலுள்ள அருள்மலையில் அருள்பாலிக்கின்ற முருகனைப் போற்றிப் பாவனை முறையில் அவிநாசி
நாவலன் இயற்றிய இந்த நொண்டி நாடகத்தின் ஏட்டுச் சுவடியை தெய்வசிகாமணிக் கவுண்டர் தர, ஏட்டிலிருந்து
பெயர்த்தெழுதி, 1971ஆம் ஆண்டு திசம்பர் 25ஆம் தேதி சென்னையில் நடந்த 22ஆம் பண்ணாராய்ச்சிக் கூட்டத்தில்
பெரியசாமித் தூரன் வெளியிட்டார். மதுரையைச் சார்ந்த பகல்வெத்தி என்பவன் மனைவியுடன் ஊடி, திங்களூருக்கு அருகிலுள்ள குருப்ப நாடு வருகின்றான். இளமையில் பொறுப்பாக வாழ்ந்தவன் போலி வேடமணிந்து வஞ்சகமாகத் திருடியும் விலைமாதரோடு
உறவாடியும் நோயாளியாகின்றான். குதிரையைத் திருடிய குற்றத்திற்காக
அரசால் கை,கால் வெட்டப்படுகின்றான். இறுதியில்
அருள்மலை முருகனைப் பாடிப் பணிந்து நலமடைகின்றான் என்பது இந் நொண்டி நாடகத்தின் கதையாகும்.
இப் பாவனைச் சிற்றிலக்கிய நாடகத்தின் முதன்மை நோக்கம் இளைஞர்களை எச்சரிப்பதும், அருள்மலை முருகனைப்
போற்றி வாழ்த்தலும் ஆகும். இந் நாடகத்தில் பல இடங்களில் முருகனின்
பெருமை பேசப்படுகின்றது. முத்தாய்ப்பாக, இறுதியில் நொண்டி திருந்தி, நலமடைய முருகனை வேண்டுகின்ற
கீழ்வரும் பகுதி முருகனடியோர்க்கு நல்விருந்தாவதாகும்.
முருகனே! ஆறுமுகவனே ! பரனே!
மூலமந்திரத்தில் முளைத்த
செந்திருவே!
கானகக் குறத்தி கணவனே!
குகனே!
குஞ்சரி கணவா ! குமரா! காங்கேயா!
சஞ்சலம் அகற்றும் சடாச்சரப்
பொருளே!
ஐயும் கிலியுமான பரனே!
மெய்யும் கிலியும் வீற்றிருந்தவனே!
கண்ணுக்குள்ளே கருணைச் சுடரே!
விண்ணுக்கப்பால் வெளியிலுற்றவனே
!
தசைநரம்புக்குள்
வீற்ற மெய்ப்பொருளே!
திருநீறணிந்து
உன் திருத்தாள் படவே
வருவாய்! வருவாய்! மயிலேறியவா!
பெற்றோர்
பிள்ளையை வெறுத்தால்
மற்றோர்
வளத்தினதுண்டோ?
அன்னையும்
நீயே! அப்பனும்
நீயே!
என்
உள்ளத்தில் இருப்பவன் நீயே!
ஏசுவது
உனையே! புகழ்வதும் உனையே!
பேசுவது
உனையே! பிதற்றுவதும் உனையே!
சொல்வதுனையே! துதிப்பதும் உனையே!
வல்வினை
அதனால் வருந்தினேன்! உன்சரண்!
வேலாயுதனே! வெண்ணீறிடவே
காலது
வளரக் காட்சி தந்தருள்வாய்!
என்று
நான் போற்ற இறையவன் அருள்சேர்
குன்றிலே
கைகால் கொடுத்து முன் எனக்குப்
பேர்
நொண்டி என்று பெருமையாய்த் திங்களூர்
நொண்டி
என்று பேர் கொடுத்திடவே!
( பக். 35&36 )
இவ்வாறு
குறையுணர்ந்து பாடிப் பணிய,
பகல்வெத்திக்குக் கை,கால் வளர்ந்து இயல்பாகி,நலமடைகின்றான். திருமுருகாற்றுப்படை, கந்தரலங்கரம், கந்தர் சஷ்டிக் கவசம் போன்றவற்றின் தாக்கமுடையதாக இப் பகுதி அமைவதோடு,
மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் பெருமையுணர்த்தப்பட்டுள்ளது.
இதில் முருகனின் உருவ அழகு, புராணக் கதைகள்,
அருற்றிறம் போன்றவற்றோடு பக்தி உருக்கமும் புதைந்துகிடப்பதால் இதை வழிபாட்டுப்
பாடலாக முருகனிடம் விண்ணப்பித்தால் குறை / ஊனம் நீங்கும்.
இதைக் கொங்கு நாட்டின் முருக வழிபாட்டு இலக்கிய வரலாற்றில் சேர்த்துப்
பரப்பலாம்; பழனி நொண்டி நாடகம், திருச்செந்தூர்
நொண்டி நாடகம் போன்றவற்றோடு இதை ஒப்பிட்டாயலாம்.
பயன்பட்டது
செந்தமிழ்க்
கலைச்செல்வர் பெ. தூரன்,(பதி.) 1971, நொண்டி நாடகமும்
அருள்மலை நொண்டியும், சென்னை: தமிழிசைச்
சங்கம் [ 264-arulmalainondi www.tamilvu.org
என்னும் இணைய முகவரியில் உள்ளது].
*******
Comments
Post a Comment