ஈரளபு இசைக்கும் இறுதியில் உயிர் – தொல்காப்பிய மாட்டேற்றுப் பொருண்மை
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி.
பல துறை ஆய்வுகளுக்கு நிலைக்களனாகவும்
விளக்கவியல் இலக்கணமாகவும் அறிவுக்கு விருந்தாகவும் தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை
சேர்ப்பதாகவும் புதுப் படைப்புகளை ஊக்குவதாவும் தொல்காப்பியம் விளங்குகின்றது. இதிலுள்ள ஒவ்வொரு நூற்பாவும்
தமிழின் பொருண்மை இயங்கியலை இலக்கணப்படுத்துகின்றன. இதற்காகத்
தொல்காப்பியர் கருத்துவிளக்கப் புலப்பாட்டு உத்திகளையும் கையாண்டுள்ளார். அவற்றுள் மாட்டேறு ஒன்றாகும். நூலின் ஓரிடத்தில் விளக்கப்பட்ட கொள்கை
மற்றோர் இடத்திற்கும் பொருந்துகையில் , முன்னர்ச் சொன்ன இலக்கணத்தை
மீண்டும் விளக்காமல், அதைச் சுட்டிக் காட்டுவது ஓர் அறிவாக்க/
சிக்கன / திறன் வளர்ப்பு/ மாட்டேற்று முறைமையாகும். தொல்காப்பியம் நெடுகிலும் பல நூற்பாக்களில்
மாட்டேறு இயல்கின்றது. இடையியலில் பொருண்மைக் கொள்கை ஒன்றை விளக்குகையில், ” ஈரளபு இசைக்கும்
இறுதியில் உயிர்” [இல்= இல்லாத
} (நூற்பா 766 அடி 01 } என்று
சொல்லின் ஈற்றில் நிலையாத ஔ என்னும் உயிர் நெடிலை மாட்டேறாகச் சுட்டுகின்றார்.
இவண் மொழி மரபில் மொழியிறுதி எழுத்துகளைப் பட்டியலிடும்போது,
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும்
(நூற்பா 69 )
என்று, ஔ எஞ்சிய பதினோரு உயிரெழுத்துகளும்
சொல்லின் இறுதியில் நிலையும் என்று வரையறுத்ததையும் இடைச்சொற்களின் இலக்கணத்தை
“தத்தம் குறிப்பால் பொருள் செய்குந” (நூ. 735 அடி
07 ) என்று சுட்டியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும்
மேற்கூறிய 766ஆம் நூற்பாவில், இக் காலத்தில் சிறப்புப் பொருளில் வழங்குகின்ற
ஓ என்னும் இடைச்சொல் தொல்காப்பியர்
காலத்தில் ஔ என்று வழங்கி, தனியாகவும் அளபெடுத்தும்,
உரையாடலின் ஒலி அழுத்தத்திற்கு ஏற்பச் சிறப்போடு இழிவுப் பொருளையும்
சுட்டியது. சான்று: ’ஓ அவன் பெரியாளு’
என்னும்போது இகழ்ச்சிக் குறிப்பு வெளிப்படுகின்றது. அடுத்து அளபு = மாத்திரை, ஒலியழுத்தத்தால்
தொடர்ப் பொருள் மாறும் என்பனவும் இந்
நூற்பாவால் அறியலாகின்றன. இங்ஙனம் தொல்காப்பிய
நூற்பாக்களின் அமைப்பு உத்தியை அணுகி விளம்பு கொள்கையைத் தெளியலாம்.
பயன்பட்டது
தமிழண்ணல் (உரை.)2008,
தொல்காப்பியம், மதுரை; மீனாட்சி
புத்தக நிலையம்.
****
Comments
Post a Comment