‘நொண்டி நாடக’ நெறி
பேராசிரியர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி.
தமிழ் இலக்கிய வரலாறு பரந்து விரிந்தது. அதில் நொண்டிச் சிந்து, ஒற்றைக் கால் நாடகம் அல்லது நொண்டி நாடகம் என்பது தி.பி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிந்து இசைப்பாவால்
ஆன சிற்றிலக்கிய நாடக வகையாகும். இவ் வகை
நாடகங்கள் அதிகமாக அறியப்படாதவை ஆனால் இவை படித்துணரவேண்டியவை. சைவ, வைணவ, இசுலாமிய மதங்களைச்
சார்ந்து நொண்டி நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்காக இந் நாடகம் மேடையில் நடித்துக் காட்டப்பட்டது. இளைஞர்களுக்கு அறவொழுக் கத்தினை
வலியுறுத்துவது இதன் நோக்கம். மனைவியைப் பிரிந்து
, மதுவாலும் விலைமாதர் தொடர்பாலும் தடுமாறித் திருடனாக மாறித்
தண்டனையாகக் கைகாலை இழந்த வளரிளமைப் பருவக் கதைத் தலைவன் மேடையில் தோன்றித் தனது இழிநிலையை விளக்கி,’ எப்படியிருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் ‘ என்று விம்முகின்றான். பின்னர், கடவுளை வேண்டிப் பணிந்து இயல்பாகின்றான் என்பது இதன் கதைப் போக்காகும். இதில் இளைஞனின்
சீர்கேடு எச்சரிக்கையாக எடுத்துக்காட்டப்படுகின்றது. அதாவது
பிறழ் உளவியல் இளைஞர்களைச் சீரழிக்கும். வளரிளமைப்
பருவத்தில் வாழ்வைச் சீரழிக்கின்ற முரண்பட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்னும்
அறநெறி இவண் அறிவுறுத்தப்படுகின்றது. இன்று திறன் பேசி,
இணையம், போதைப் பொருள், மோசமான நண்பர்களின் சேர்க்கை, மனச் சோர்வு
ஆகியன இளைஞர்களைத் தவறான போக்கில் நுழையச் செய்கின்றன. காலப்போக்கில் பழக்கம் வழக்கமாக மாறி அடிமையாகின்றனர். இதனால் அத்தகையோரின் முன்னேற்றம் பாதிக்கப்படு வதுடன் குற்றவாளியாகவும்
ஆகிவிடுகின்றனர். எனவே நொண்டி நாடகம் இதை வெளிப்படுத்தி
எச்சரிக்கின்றது.
இருமனப் பெண்டிரும்
கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) என்னும்
திருக்குறளும்,
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
என்னும் பணம்
படைத்தவன் திரைப்பட வாலி பாடலும் இங்கு எண்ணத்தக்கன. இறை நம்பிக்கை, விளையாட்டு, தியானம், யோகப் பயிற்சிகள், மனவளக் கலைச் செயல்பாடு, நல்லினம் சேர்தல்
போல்வன வளரிளமைப் பருவத்தினரை மேன்மைப்படுத்துவன.
அருள்மலை
நொண்டி நாடகம்:
பெரியசாமித் தூரன் பதிப்பித்த
அருள்மலை நொண்டி நாடகத்தின் இறுதியில் இயல்கின்ற முருகப் போற்றியையும் இவண் ஒப்பல்
தகும். கிபி 17ஆம் நூற்றாண்டில் ஈரோடு திங்களூருக்கு
அருகிலுள்ள அருள்மலையில் அருள்பாலிக்கின்ற முருகனைப் போற்றிப் பாவனை முறையில் அவிநாசி
நாவலன் இயற்றிய இந்த நொண்டி நாடகத்தின் ஏட்டுச் சுவடியை தெய்வசிகாமணிக் கவுண்டர்
தர, ஏட்டிலிருந்து பெயர்த்தெழுதி, 1971ஆம்
ஆண்டு திசம்பர் 25ஆம் தேதி சென்னையில் நடந்த 22ஆம் பண்ணாராய்ச்சிக் கூட்டத்தில் பெரியசாமித் தூரன் வெளியிட்டார். மதுரையைச் சார்ந்த பகல்வெத்தி
என்பவன் மனைவியுடன் ஊடி, திங்களூருக்கு அருகிலுள்ள குருப்ப நாடு
வருகின்றான். இளமையில் பொறுப்பாக வாழ்ந்தவன் போலி வேடமணிந்து
வஞ்சகமாகத் திருடியும் விலைமாதரைப் புணர்ந்தும் நோயாளியாகின்றான். திருடிய குற்றத்திற்காக அரசால் கை,கால் வெட்டப்படுகின்றான்.
இறுதியில் அருள்மலை முருகனைப் பாடிப் பணிந்து நலமடைகின்றான் என்பது இந்
நொண்டி நாடகத்தின் கதையாகும். இப் பாவனைச் சிற்றிலக்கிய நாடகத்தின்
முதன்மை நோக்கம் இளைஞர்களை எச்சரிப்பதும், அருள்மலை முருகனைப்
போற்றி வாழ்த்தலும் ஆகும்.
முருகனே! ஆறுமுகவனே ! பரனே!
மூலமந்திரத்தில் முளைத்த
செந்திருவே!
கானகக் குறத்தி கணவனே!
குகனே!
குஞ்சரி கணவா ! குமரா! காங்கேயா!
சஞ்சலம் அகற்றும் சடாச்சரப்
பொருளே!
சொல்வதுனையே! துதிப்பதும் உனையே!
வல்வினை
அதனால் வருந்தினேன்! உன்சரண்!
வேலாயுதனே! வெண்ணீறிடவே
காலது
வளரக் காட்சி தந்தருள்வாய்!
என்று
அவன் போற்ற இறையவன் அருள்சேர் குன்றிலே கைகால் கொடுத்து இயல்பாக்கினார்.
தவறு செய்யக்கூடாது;
செய்துவிட்டாலும் திருந்தவேண்டும்/ களவும்
கற்று மறக்கலாம் என்னும் வாழ்வியலை நொண்டி
நாடகம் நெறிப்படுத்துகின்றது.
>>>>>
Comments
Post a Comment