முதற் குறட்பாவின் தொடரமைப்பு

பேராசிரியர்  குழந்தைசாமி, புதுச்சேரி

தரவுகளை ஆய்ந்து தமிழ்ப் பொருண்மையைத் தெளிவிக்க  ஆக்கப்பட்ட விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியம் தொடரை மையமிட்ட இலக்கணமாகும் ; அதோடு ஆங்காங்கே தமிழ்த் தொடரியல் செய்திகளையும் இது வகுத்துரைத்துள்ளது. ஒற்று மிகுதல், வேற்றுமை, எச்சங்கள், இடைச்சொல், உரிச்சொல், தொகை, எழுவாய் பயனிலை இயைபு, பொருள்கோள், மரபியலின் சொல் வழக்கு வரையறை போல்வன தொடரியல் சார்ந்தவை. இதனடிப்படையில் இலக்கியத்தை அணுகினால் மயக்கம் ஏற்படாமல் புரிதிறன் சிறக்கும். பொது அமைப்பிலிருந்து பல கட்டுப்பாடுகளால் செய்யுளின் தொடரமைப்பு வேறுபடுகின்றது. இதை அறிந்து பாத் தொடரை முறையாக அறிந்துகொள்ளவேண்டும். அம் முறையில் திருக்குறளின் தொடரமைப்பை நோக்கலாம். ஒரு குறட்பாவில் ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்களோ அமைந்திருக்கலாம். அந் நிலையில்,

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு (01)

என்னும் முதற் குறட்பாவில் எத்தனை தொடர்கள் உள்ளன என்று சோதித்தால், இந்தக் குறட்பாவை எவ்வாறு பொருள்கொள்கின்றோம் என்பதைப் பொருத்து இயலும்.  இக் குறட்பாவிற்கு,

        எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.     

        அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

 

என்று  பரிமேலழகரை அடியொற்றி மு. வரதராசன் எழுதிய உரைப்படி, ( இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை- பரிமேலழகர்) இதில் இரண்டு தனிதனி முழுத் தொடர்கள் அமைகின்றன. அதாவது  அகரத்தையும் ஆதிபகவனையும் ஒப்பிட்டும் எழுத்தையும் உலகத்தையும் ஒன்றிணைத்தும், அது போல இது என்று தனித்தனியாக நிறுத்தி, உவமைப்படுத்திக் காட்டுகையில் , இரண்டு தொடர்கள் அமைய, இரண்டையும் அது போல என்னும் தொடரிணைப்புச் சொல் இணைக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத முதற்பொருளைக் கண்ணுக்குத் தெரிந்த அ எழுத்தின் மூலமாக விளக்குவது இம் முறை. இவ்வாறு அல்லாமல்,

அ எழுத்துக்கு முதலாவதுபோல ஆதியில் பகுக்கமுடியாத வானம் (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம் 

என்று சிவயோகி சிவக்குமார் உரை கூறுமாறு இரண்டும் ஒன்றே என்று பொருளுரைத்தால், ஒரே தொடராக அமையும். இந் நெறியில் குறட்பாக்களை அணுகிக் கருத்துணரலாம்.

                                       பயன்பட்டது

                  https://www.ytamizh.com/thirukural/kural-1

                                                            *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு