இருபெயரொட்டுப் பண்புத்தொகையின் பொருண்மைக் கட்டமைப்பு

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

          தமிழ் இலக்கணம் அளவையியல் தன்மையுடன் அறிவியல் பாங்கில் அமைந்ததாகும். தமிழ் இலக்கணக் கொள்கைகள், தன்விளக்கமுடைய கலைச்சொற்களால் குறிக்கப்படுகின்றன. ஆகவே இலக்கணக் கொள்கைகளைத் தெளியக் கலைச்சொற்களின் பொருளுணரவேண்டும். அம் முறையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகையின் பொருண்மைக் கட்டமைப்பை விளக்குவதாக இக்  குறிப்புரை இயல்கின்றது.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:

                   இரண்டு + பெயர்கள் + ஒட்டி +உருவான + பண்பு + தொகை என்னும் ஆறு சொற்கள்/ பொருண்மைக் கூறுகள் முறைப்படி ஒட்டி இணைய இக் கலைச்சொல் உருவாகின்றது. இவ் ஆறு கூறுகளையும் பொருளுணர்ந்தால், இந்தக் கலைச்சொல்லால் விளம்பப்படுகின்ற இலக்கணக் கூறைத் தெளியலாம்.

Ø தொகை: தொடராக்கத்தில், இரண்டு சொற்கள் ஒட்டும்போது அவற்றிற்கிடையில் பொருட்கூறு(கள்) புற வடிவில் இல்லாமல், புதைவடிவில் இயல்தல் தொகை ஆகும்.

  சான்று: பால் குடி. இவ் இரண்டு சொற்களுக்கிடையே என்னும் இரண்டாம் வேற்றுமையுருபு தொக்கிநிற்பதால் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை எனப்படுகின்றது. ஆனால் இதைப் படிப்போர் ’நீ பாலைக் குடிக்கலாம்’ என்று புரிந்துகொள்வர். இவ்வாறே ஒவ்வொரு தொகையும் இயலும்.

v பண்புத்தொகை:  மேற்கூறியவாறு அமைகின்ற தொகையில், இரண்டு சொற்களிடையே ஆகிய என்னும் பண்புருபு தொக்கிநின்றால் அது பண்புத் தொகை என்று காரணப் பெயர் பெறுகின்றது.

    சான்று: வெண்டாமரை = வெள்ளை நிறத் தாமரை, இதில் நிறம் என்னும் பண்பு தொக்கிநிற்பதால், பண்புத்தொகை ஆகின்றது,

Ø இருபெயரொட்டுப் பண்புத்தொகை: பண்புத் தொகையின் இன்னொரு விரிவு இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.  இதில் பொதுப் பெயரான அடக்கு சொல்லும் சிறப்புப் பெயரான அடங்கு சொல்லும் ஒட்டுகின்றன.

     சான்று: சாரைப் பாம்பு, முல்லைப் பூ. இவற்றில் இரண்டாம் சொல்லின் ஒரு வகையாக முதற்சொல் அமைகின்றது. முதற்சொல்லைச் சொன்னால் இரண்டாம் சொல்லும்; இரண்டாம் சொல்லைச் சொன்னால் முதற்சொல்லும் விளங்கும். பூக்கடையில் முல்லை இரண்டு முழம் தா என்றால் பூ என்பது தானே விளங்கும். இவ்வாறு அமைவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

          இவ்வாறாக, ஒட்டுமொழியான தமிழின் இலக்கணம் தொடரை மையமிட்டதாகும். தொடராக்கத்தில் சொற்களுக்கிடையில் பொருண்மைக் கூறு தொக்கு வரும்போது உருவாகின்ற தொகையமைப்பில், பண்புத்தொகையின் விரிவாக இருபெயரொட்டுப் பண்புத்தொகை இயல்கின்றது. முல்லைப் பூ என்பதில் அடங்குசொல்லான முல்லையும், அடக்குசொல்லான பூவும் ஒட்டி இத் தொகை ஆகின்றது. இவ்வாறு இலக்கணக் கலைச்சொற்களை விளங்கிக்கொண்டால் ஆர்வமும் தெளிவும் மிக்கு இலக்கணம் எளிமையானதாக இயலும்.

                                                        ******

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு