தூரன் போற்றும் அகவெற்றி

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிரமாகத் திகழ்பவர் பெரியசாமித் தூரன். (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) கொங்குத் தமிழறிஞர், முன்னோடியான பாரதி பரப்பாளர், மரபு / புதுப் பாவலர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைத் தொண்டர், சிறுவர் இலக்கிய முன்னோடி, இந்திய மொழிகளில் முதலில், தமிழ் அறிவியக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் தமிழின் முதற் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்தவர் எனும் நிலையில் இக்காலத் தமிழ்  இலக்கிய /அறிவியக்கத்தின் முதன்மைப் புத்தாக்கிகளில் பங்களிப்பாளர்களில் போற்ற / பின்பற்றத்தக்கவர். தமிழ் இலக்கியப் பாடுபொருளை விரிவாக்கி இவர் ஆக்கியுள்ள அன்பு வழி (இளந்தமிழா,பக்.99-101) என்னும் பாடல் உயிரிரக்க உளவியல் தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

அன்பு வழி:

            அன்பு என்னும் உள்ளச் சீர்மை உயிரினங்களின் உயரிய பண்பாகும். தன்னைப் போலப் பிறரையும் எண்ணிப் போற்றுகின்ற செம்மை இதனால் உண்டாகும். திருக்குறள் முதலிய அற/ நெறி இலக்கியங்கள் அன்பின் தேவையை/ பயனை விளம்புகின்றன. இவ் வரிசையில் பெரியசாமித் தூரனும் பங்களித்துள்ளார். இவரது இளந்தமிழா பாத் தொகுப்பு நூலில்  அன்பு வழி  என்னும் தலைப்பில் இயல்கின்ற பாவில்,

                மக்கள் எல்லாம் தேவர்களாய் மாற ஒரு வழியுண்டு       என்று தொடங்கி,

 

                தக்கபடி மனம் மலரத் தந்திரமும் நாமறிந்தால்

                தாரணியை விண்ணாடாய்ச் சமைத்திடலாம்

 

என்று வழிகாட்டுகின்றார். மனம் என்னும் குரங்கு மாயங்களை நிகழ்த்தக்கூடியது; நிலையாக நில்லாதது; தாழ்வான எண்ணங்களை நினைக்கக்கூடியது. இத்தகைய மனத்தை வரமாகக் கருதி, அன்பு செய்து உயிரோம்பும் அறநெறியை அதற்குக் கற்றுகொடுத்துவிட்டால் அமைதியும் வளர்ச்சியும் வாய்ப்பாகும் என்பது தூரனின் கொள்கையாகும். அன்பை விண்ணொளியாய் உருவகித்து, மனக் குகையில் தங்கியிருக்கின்ற அறியாமை/ பொறாமை /ஆணவம் ஆகிய இருட்டை/ பிறழ் உணர்ச்சிகளை அன்பாகிய விண்ணொளியால் விரட்டிடுக என்று அறமுரைக்கின்றார். புறவெற்றியோடு அகவெற்றியும் தேவை என்று வலியுறுத்தி, அதற்காக மனத்தில்,

            மென்மை உணர்ச்சி எல்லாம் மேலோங்கச் செய்திடுவாய் !

என்று அறிவுறுத்தி,

            அனபினிலே மனம் மலர அமரனைப் போல் வாழ்ந்திடுவாய்!

என்று அன்பின் பயனைப் பறைசாற்றுகின்றார். இந்தப் பகுதி தூரனை ஒரு சித்தராக / உலகநல விழைவியாக அடையாளப்படுத்துகின்றது. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, விரட்டி மேன்மை காண இத்தகைய பாக்கள் வாய்ப்பாகின்றன. இலக்கியங்கள் இவ்வாறு வழிகாட்டும்போது, மக்கள் / இளைஞரகள் சீரடைவர்; மானுடம் வெல்லும்.

    பயன்பட்டது :  https://www.tamilvu.org/library/nationalized/pdf/61-pe.thuran/237-elantamizha.pdf

                                               ****

            

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு