செல்வச் செவிலி - வள்ளுவப் பொருண்மை

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            விளம்பு பொருளாலும் வீரியம் சான்ற நடையாலும் திருக்குறள் சிறப்படைகின்றதுஅத்தகைய சீர்மைகளுள் ஒன்று செல்வச் செவிலி என்னும் தொடராட்சி ஆகும். பழந்தமிழ் மரபில்  ஒரு பெண் குழந்தையை ஈன்ற நற்றாயோடு வளர்க்கின்ற செவிலித் தாயும் முதன்மை பெறுகின்றார். ஆனால் இந்தச் செவிலி நற்றாயின் உதவியுடனேயே குழந்தையை வளர்ப்பார். இந்த மரபை விரிவாக்கிச் செவிலியே குழந்தையைச் சீராட்டுவதாக, ஒருமருங்கு உருவகமாக,

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.(757)

என்னும் குறட்பா ,அன்பின் விரிவால் அருள் தோன்றிப் பொருளால் சிறக்கும் என்னும் கருத்தில் அமைக்கப்பட்டுள்ளதுஆனால் உருவக நலத்துடன், தொடர்புடையாரிடம் கொள்கின்ற அன்பைத் தாயாகவும்அனைத்து உயிர்களிடமும் காட்டுகின்ற அருளை அதன் சேயாகவும், அருளை வளர்க்கின்ற செவிலியாகப் பொருளையும் குறிக்கின்றது. பல்லுயிர் காக்கின்ற உயிரிரக்கத்தை வலியுறுத்துகின்ற இக் குறட்பா,

v  அறம் செய்யப் பொருள் தேவை

v  அந்தப் பொருள் அறம் செய்ய / நிலைக்க உதவவேண்டும்

என்னும் கருத்தைச் செல்வச் செவிலி என்னும் சிறப்புத் தொடராலும், உண்டு என்னும் வினைச்சொல்லாலும் உணர்த்துகின்றது. தாய் & குழவி என்று தலைமுறை மரபைச் சுட்டி, அறச் செயல்கள் தொடர்ந்து இயலவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. இத்தகைய முருகியல் கூறுகள் இன்பம் பயப்பதோடு சிந்தனைக்கும் விருந்தாகின்றன. வள்ளுவத்தின் நிலைபேற்றிற்கு இத்தகைய நடைச் சீர்மையும் காரணமாகின்றது.

                                    ****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு