வள்ளுவம் எச்சரிக்கும்பாவிகள்

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

           

அற இலக்கியமான வள்ளுவம் இதைச் செய் ; இது நல்லது என்று அறிவுறுத்துவதோடு இவை தீங்கானவை; அழிவை உண்டாக்குபவை என்றும் எச்சரிக்கின்றது. அவ்வாறு எச்சரிப்பவற்றைப் பாவி என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். இச் சொல் மக்களின் பேச்சு மரபிலிருந்து பெறப்பட்டதாகலாம்.  தனக்கும் சமூகத்திற்கும் ஒவ்வாத ஒன்றைச் செய்யும் கொடியவன் பாவி என்று அழைக்கப்படுகின்றான். அதாவது அடிப்படை மனித மாண்பிலிருந்து விலகி, அறிந்தும் அறியாதது போல, பாவனையாகத் தீமை செய்வது இந்தப் பிறழ் உணர்ச்சியாகும். நாட்டியத்தில்  ’பாசாங்கு செய்’ என்று இச் சொல் வினையாக இயல்வது இவண் ஒப்பத்தக்கது. திருக்குறளில்,

   அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத்
            தீயுழி உய்த்து விடும் (168)

என்று, பொறாமையைக் கொடும்பாவி என்று உருவகித்து,  இது செல்வத்தை அழிப்பதோடு, தீய பழக்கங்களுக்கும் ஆளாக்கிவிடும் என்று குறிப்பிடுகின்றார். அடுத்து,

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் (1042)

என்னும் குறட்பாவில் வறுமையையும் பாவி என்று சுட்டுகின்றார். அதாவது, தெரிந்தோ தெரியாமலோ பிறராக்கம் பொறாமல் இருந்தாலும், வினையாற்றிப் பொருள் ஈட்டாமல் வறுமையில் உழன்றாலும்  நிகழ்காலத்திலும் எதிர் காலத்திலும் வளமான, பயனுள்ள வாழ்க்கையை வாழமுடியாது என்னும் அறன் அல்லாதவற்றின் தீய விளைவுகள் எச்சரிக்கையாக இக் குறட்பாக்களில் விடுக்கப்படுகின்றன. பிறழ் உணர்ச்சிகளைத் தவிர்த்துச் செழிப்பதோடு, சமூக அக்கறையுடனும் உயிரிரக்கத்தோடும் வாழ்ந்து என்றைக்கும் நல்வாழ்வை வாய்ப்பாக்குக என்னும் அறவுரை இக் குறட்பாக்களில் வலியுறுத்தப்படுகின்றது. மேற்படிக் குறட்பாக்களில் ”எனவொரு” என்னும் தொடரால் தகாதவற்றின் பாதிப்பை அழுத்தமாக எடுத்துரைப்பது உன்னத்தக்கது. வள்ளுவர் விடுக்கின்ற இத்தகைய எச்சரிக்கைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைத்தால் அறம் பெருகும்; பிறழ்மை வீழும்: மானுடம் வெல்லும். இத்தகைய நிலைபேறுடைய மானிட மதிப்புகளின் வைப்பக மாகத் திகழ்ந்து வள்ளுவம் உலக உய்விற்கு உறுதுணையாகின்றது.

                                                *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு