திருக்குறளில் எண்ணாது / என்னாது : ஒப்பொலிப் பொருண்மை

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            மொழிப் பொருண்மைக் கட்டமைப்பில் அனைத்துச் சொற்களும் பொருண்மை சுட்டுவனவாக இயல்கின்றன. எனினும் பொருட்பன்மை, அடக்குதலும் அடங்குதலும், எதிர்மறை, ஒப்பொலிச் சொற்கள் போன்ற சிறப்புக் கூறுகள் உருவாகின்றன. இவற்றால் பொருட் குழப்பம் நேரலாம்.  அதனால் இத்தகைய சிறப்புப் பொருண்மை இயக்கத்தை அறிதல் தெளிவுக்கு வாய்ப்பாகும். தமிழில் வேறுபட்ட பொருள்கொண்ட சொற்கள் , ஒப்புமையுடைய ஒலியமைப்புடையனவாக [ள், ஆல் ] அமைவதுண்டு. இத்தகைய மயங்கொலிச் சொற்களைத் தொடர்ச்சூழல் நோக்கிப் பொருண்மைக் கூறுகளைப் பிரித்தறிந்து பொருள் தெளியலாம். சான்றாகஎண்ணாமல்; என்னாமல் என்னும் சொற்களைக் கருதலாம். இவை முறையே,

Ø  ஒன்றன் பின் விளைவை எதிர்நோக்காமல்

Ø  எனக் கருதாமல்

என்னும் மாறுபட்ட கருத்துடையன. இவை கீழ்வருமாறு குறள் மொழியில் இயல்கின்றன:

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு ( 180 )

என்னும் குறட்பாவில், பிறர் பொருள் மீது பற்றுக் கொண்டால் தீமை ஏற்படும் என்னும் பின்விளைவைக் கருதாமல், கேட்டைப் பெறவேண்டாம் என்று எச்சரிக்கும்போது எண்ணாது இயல்கின்றது. இதன் பகுதி எண்  [நினை] ஆகும். அடுத்து,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (36 )

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும் ( 1138 )

ஆகிய குறட்பாக்களில் என்னாது என்னும் சொல் எனக் கருதாமல்  என்னும் கருத்தில்  பயில்கின்றது. இதன் பகுதி என்று கருது  என்பதாகும். இவ்வாறு தொடர்ச்சூழல் நோக்கிச் சொற்களின் கருத்தை அறியின் இலக்கியப் புரிதிறன் சிறப்பதோடு, தமிழ்ப் பொருண்மையின்  இயங்கியலையும் தெளியலாம்.

                                                        ********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு