தூரனின் பொதுநல வேணவா= கண்ணுதல்
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
இலக்கியக் கருத்துப் புலப்பாட்டு நெறிகளில்
மக்களுக்கு அறிமுகமான தொன்மக் கதைகளைச் சுட்டிக்காட்டுவதும் ஒன்றாகும். இதனால் படைப்பாளர்
வாசகருக்கு நெருக்கமாவதோடு தெளிவையும் உண்டாக்குகின்றார். இவ் உத்தியைப் பன்முகப் பங்களிப்புக்காகப்
போற்றப்படுகின்ற பெரியசாமித் தூரன் கண்ணுதல் போல என்னும் பாவில் (தூரன் கவிதைகள்,
ப. 143) கையாண்டுள்ளார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைச்
சிவபெருமான் உண்டு, தேவர்களுக்கு அமிழ்தம் கிடைக்கச்செய்தார் ; சிவன் நெற்றியில் கண்ணுடையவர்
ஆகியன சிவனின் அருட்பெருக்கை வெளிப்படுத்துகின்ற தொன்மக் கதைகளாகும். இவற்றை மேற்சுட்டிய பாடலில் அமைத்துத் தூரன் மக்களுக்கு அறமுரைக்கின்றார். தீமை
விளைவிக்க எண்ணாமல் , பொதுநலம் பெருக்குக ; மானுட வெற்றியை வாய்ப்பாக்குக என்று அழைக்கின்ற
தூரன்,
தீமையாய் ஆவன இன்பம் அளிக்குமோ? ஐயகோ!
நஞ்சினைப்
பாய்ச்சி நல்லமுது உண்ணவோ?
என்று சீற்றத்துடன்
வினவி,
நஞ்சினை ஏற்றே மற்றவர் அமுதுண்ணக்
கண்ணுதல் போல எண்ணலே மேன்மை !
என்று உலக
உய்வுக்கான வழியைக் கூறி, இதன் பயனாக,
விண்ணுலகு தழைந்திடும் திண்ணமே!
என்று பொதுநல
வேட்கையின் விளைவை உறுதிப்படுத்துகின்றார் தீமை என்னும் நஞ்சை . உணவில் ஊற்றாதீர்!
சிவனார் போல நஞ்சுண்டு நன்மை ஆற்றுக ! பிறர் துயர் துடைக்க! என்னும் விழுமியத்தைத்
தொன்மக் கதை மூலம் தூரன் வலியுறுத்துகின்றார்.
எண்ணமே செயலாகின்றது; நற்செயலால் சீர்மை வாய்க்கின்றது.
நன்றி:
https://www.tamilvu.org/library/nationalized/pdf/61-pe.thuran/238-thorankavithaigal.pdf
********
Comments
Post a Comment