வளரிளம்பருவத்தினரை நெறிப்படுத்துகின்றநொண்டி நாடகம்

                                                  பேராசிரியர் . கொழந்தசாமி, புதுச்சேரி.

 

நொண்டிச் சிந்து, ஒற்றைக் கால் நாடகம்  அல்லது  நொண்டி நாடகம்  தி.பி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிந்து இசைப்பாவால் ஆன  சிற்றிலக்கிய நாடக வகையாகும். சாதாரண மக்களுக்காக இந் நாடகம் மேடையில் நடித்துக்காட்டப்பட்டது. இளைஞர்களுக்கு அறவொழுக்கத்தினை வலியுறுத்துவது இதன் நோக்கம். மனைவியைப் பிரிந்து  , மதுவாலும் விலைமாதர் தொடர்பாலும் தடுமாறித் திருடனாக மாறித் தண்டனையாகக் கைகாலை இழந்த வளரிளமைப் பருவக் கதைத் தலைவன் மேடையில் தோன்றித் தனது இழிநிலையை விளக்கி,’ எப்படியிருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்என்று விம்முகின்றான். பின்னர், கடவுளை வேண்டிப் பணிந்து இயல்பாகின்றான் என்பது  இதன் கதைப் போக்காகும். இதில் இளைஞனின் சீர்கேடு எச்சரிக்கையாக எடுத்துக்காட்டப்படுகின்றது. அதாவது பிறழ் உளவியல் இளைஞர்களைச் சீரழிக்கும். வளரிளமைப் பருவத்தில் வாழ்வைச் சீரழிக்கின்ற முரண்பட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்னும் அறநெறி இவண் அறிவுறுத்தப்படுகின்றது. இன்று திறன்பேசி, இணையம், போதைப் பொருள், மோசமான நண்பர்களின் சேர்க்கை, மனச் சோர்வு ஆகியன இளைஞர்களைத் தவறான போக்கில் நுழையச் செய்கின்றன. காலப்போக்கில் பழக்கம் வழக்கமாக மாறி அடிமையாகின்றனர். இதனால் அத்தகையோரின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதுடன் குற்றவாளியாகவும் ஆகிவிடுகின்றனர். எனவே நொண்டி நாடகம் இதை வெளிப்படுத்தி எச்சரிக்கின்றது.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
            திருநீக்கப் பட்டார் தொடர்பு (920)  
என்னும் திருக்குறளும்,

கண் போன போக்கிலே கால் போகலாமா?

கால் போன போக்கிலே மனம் போகலாமா?

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் 

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

 

என்னும் பணம் படைத்தவன் திரைப்பட வாலி பாடலும் இங்கு எண்ணத்தக்கன.  இறை நம்பிக்கை, விளையாட்டு, தியானம், யோகப் பயிற்சிகள், மனவளக் கலைச் செயல்பாடு, நல்லினம் சேர்தல் போல்வன வளரிளமைப் பருவத்தினரை மேன்மைப்படுத்துவன.

                                                     ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு