பத்தாம் குறட்பாவின் தொடரமைப்பு

பேராசிரியர்  குழந்தைசாமி, புதுச்சேரி

விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியம் தொடரை மையமிட்ட இலக்கணமாகும் ; அதோடு ஆங்காங்கே தமிழ்த் தொடரியல் செய்திகளையும் இது வகுத்துரைத்துள்ளது. ஒற்று மிகுதல், வேற்றுமை, எச்சங்கள், இடைச்சொல், உரிச்சொல், தொகை, எழுவாய் பயனிலை இயைபு, பொருள்கோள், மரபியலின் சொல் வழக்கு வரையறை போல்வன தொடரியல் சார்ந்தவை. இதனடிப்படையில் இலக்கியத்தை அணுகினால் மயக்கம் ஏற்படாமல் புரிதிறன் சிறக்கும். பல கட்டுப்பாடுகளால் பொது அமைப்பிலிருந்து செய்யுளின் தொடரமைப்பு வேறுபடுகின்றது. இதை அறிந்து பாத் தொடரை முறையாக அறிந்துகொள்ளவேண்டும். அம் முறையில் பத்தாம் திருக்குறளின் தொடரமைப்பை நோக்கலாம். ஒரு குறட்பாவில் ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்களோ அமைந்திருக்கலாம். அந் நிலையில்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)

என்னும் பத்தாம் குறட்பாவில்,

ü  இறைவனின் திருவடிகளைப் பொருந்திநிற்பவர் மனிதப் பிறவியில் ஏற்படுகின்ற துன்பங்களைக் கடக்க முடியும்.

ü  ஆனால் திருவடிகளைப் பற்றாதோர் துன்பங்களைக் கடக்க முடியாது.

என்னும் இரண்டு குறைத் தொடர்கள் உள்ளன. அதாவது ஒரு தொடருக்குத் தேவையான எழுவாய், செயப்படுபொருள், வினைமுற்று என்பவற்றில், முதல் தொடரில் யார்? [இறைவனின் திருவடிகளைப் பொருந்திநிற்பவர் ] என்பதைச் சுட்டுகின்ற பெயர்ச் சொல்/ எழுவாய் இல்லை; இரண்டாம் தொடரில் எதை? [துன்பங்களை] என்னும் செயப்படுபொருளை உணர்த்தும் பெயர்ச் சொல் இல்லை. வாசகர் நுணுகி ஆராய்ந்து, இந்த இரண்டு தொடர்களும் ஒரே கருத்தை உரைப்பனவாக இருப்பதால் குறையை நிறைத்துப் பொருள் காண்கின்றார்.

இந் நெறியில் குறட்பாக்களை அணுகித் தெளியலாம்.

                                       பயன்பட்டது

                  https://www.ytamizh.com/thirukural/kural-1

                                                            *****

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு