அறிவின் ஆற்றலை வெளிப்படுத்தும் 422ஆம் குறட்பாவின் தொடரமைப்பு
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
தொடரை மையமிட்டு இலக்கணம் இயம்புகின்ற
தொல்காப்பியம் ஆங்காங்கே தமிழ்த் தொடரியல்
செய்திகளையும் வகுத்துரைத்துள்ளது. இவற்றுள் பொருள்கோள்,
யாப்பு, குறை போல்வன சிறப்பாகச் செய்யுளுக்குரியவை.
இதனடிப்படையில் இலக்கியத் தொடரமைப்பை
அணுகினால் மயக்கம் ஏற்படாமல் புரிதிறன் சிறக்கும். அதோடு பல
கட்டுப்பாடுகளால் பொது அமைப்பிலிருந்து செய்யுளின் தொடரமைப்பு வேறுபடுகின்றது.
இதை நோக்கிப் பாத் தொடரை முறையாக அறிந்துகொள்ளவேண்டும். அம் முறையில் 422ஆம் திருக்குறளின் தொடரமைப்பை விளக்கலாம்.
ஒரு தொடரில் உறுப்புச் சொற்கள் குறைந்து முறைமாறி இயலலாம். அந் நிலையில்,
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (422)
என்னும் குறட்பாவில், ’இது இதை இவ்வாறு காக்கும்’
என்கின்ற வாய்பாட்டில் தொடர் இயல்கின்றது. ’அறிவு தகாத உணர்ச்சி
தோன்றாமல் மனத்தைக் கட்டுப்படுத்தும் ‘ என்னும் அறிவின் ஆற்றலை/ பெருமையைப் போற்றும் நரம்பியல் கொள்கை இதில்
எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடரில் செயப்படுபொருள் புறநிலையில் வெளிப்படையாக
இல்லை; தொடரின் வினைப் பொருண்மையை நோக்கி, மனம்/ உணர்ச்சி என்பதைச் செயப்படுபொருளாக வருவித்துக் கருத்தறியலாம். அவ்வாறே செலவிடா என்னும் வினையெச்சத்தை ’செல்லவிடாமல்’
என்று நிறைவாக்கி அமைக்கலாம். இவ்வாறு நுணுகி ஆராய்ந்து,
குறட்பாவை உரைநடையில் அமைத்துப் பொருளுணரலாம். இந் நெறியில் பிற
குறட்பாக்களையும் அணுகித் தெளியலாம்.
*****
Comments
Post a Comment