அண்ணாத்தல்: அங்காத்தல் – பொருண்மை ஒப்பு
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
உயர்தனிச் செம்மொழியான தமிழில்
பழந்தமிழ்ச் சொற்களும் இக்கால மக்கள் வழக்கில் பயில்கின்றன. ’அண்ணாந்து’ என்பது இத்தகைய பழமை கொண்டதாகும். திருக்குறளில்,
உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு (255)
என்னும் குறட்பாவில் , உலகில் பல்லுயிர்ச் சமன்மையை வலியுறுத்தும்போது ஊனுண்பதால் வாழவேண்டிய உயிரினங்களின் எண்ணிக்கை குறைவதை எச்சரிக்கத் தொன்மக் கருத்தான நரகம் [ மன்னிக்கவியலாத / ஈடுசெய்யமுடியாத இழப்பு]
காட்டப்படுகின்றது. கொடூரச் செயலான உயிர்க் கொலையும், அவ்வாறு கொல்லப்பட்ட
உயிரினங்களின் ஊனை உண்பதும் ஏற்புடையதல்ல; ஊனுண்போர் நரகத்தை
அடைவர்; ஒருபோதும் நரகத்தின் வாயில் திறக்காது; அங்கிருந்து தப்பமுடியாது என்று எச்சரிக்க அண்ணாத்தல் [வாயைத் திறத்தல்]
என்னும் மக்கள் வழக்காற்றை வள்ளுவம் ஆண்டுள்ளது. இக் காலத்தில் வாயைத் திறந்து, தலையை உயர்த்தி நீர் பருகுவதை
அண்ணாந்து குடி என்கின்றனர்.
அதாவது மேல் தாடையோடு ஒட்டியுள்ள கீழ் தாடையை விலக்கி வாயைப் திறத்தலை இது குறிக்கின்றது. இவண்,
அ, ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும் (தொல். நூற்பா 03 )
என்னும் நூற்பாவில் இயல்கின்ற அங்காத்தல் என்னும் ஒலிப்பு முயற்சி ஒப்பத்தக்கது. கீழ்த் தாடையைத் திறத்தலையே இச் சொல்லும்
சுட்டுகின்றது. இங்ஙனம் வழங்குகின்ற பழந்தமிழ்ச் சொற்களின் கருத்தை அறிந்தால்
புரிதிறன் சிறக்கும்.
********
Comments
Post a Comment