655ஆம் குறட்பாவின் இருமைப் பொருண்மை: செயலும் உணர்வும்
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
மானுட
மேம்பாட்டிற்கும் வெற்றிக்கும் வாய்ப்பாகின்ற வள்ளுவம்,
மனித எண்ணங்களை ஆராய்ந்து அவற்றை வெற்றிகொள்கின்ற முறையையும் எடுத்துரைக்கின்றது.
இந் நோக்கில் ஆட்சி ஆளுமை/ உளவியல்/ மனித உறவியல் ஆகியன தொடர்பான,
எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன
செய்யாமை நன்று ( 655 )
என்னும் குறட்பாவின் இருமைப் பொருண்மை கருதத்தக்கதாகும்.
அதாவது வருந்தத்தக்க இழிசெயல்களைச் செய்யலாகாது: செய்துவிட்டால் திருத்திக்கொள்க; மென்மேலும் அதற்காக
வருந்தக்கூடாது என்னும் உளவியல் கொள்கை இதில் எடுத்துரைக்கப்படுகின்றது. இதிலுள்ள எற்று = இதைச் செய்துவிட்டோமே;
ஏல்= விட்டால்: அன்ன= அத்தகையவற்றை ஆகிய சொற்களின் பொருளைப் புரிந்துகொண்டு,
மற்று என்னும் இடைச்சொல் வினைமாற்றுப் பொருளில் [ நோக்குக: தொல்காப்பியம் , நூற்பா
747 ], அதாவது முன் தொடரில் சுட்டிய வினையினும் வேறான வினையைச் சுட்டி
ஆளப்படுகிறது என்பதை அறிந்து, குறட்பாவின் கருத்தைத் தெளியலாம்.
அப்போது இக் குறட்பாவில் இரண்டு தொடர்கள் இயல்வதை அறியலாம். இவ் இரண்டு தொடர்களையும் மீண்டும் என்று பொருள்படுகின்ற மற்று என்னும்
இடைச்சொல் இணைக்கின்றது. இங்கு,
தானே வருந்தத்தக்க இழிசெயல்களைச் செய்யலாகாது
செய்துவிட்டால் திருத்திக்கொள்க; அதற்காக மென்மேலும்
வருந்தக்கூடாது
என்னும் ஆளுமைக் கொள்கை அறிவுறுத்தப்படுகின்றது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்போர்
ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து, தவறிழைக்காமல் ஆற்றவேண்டும்;
தவறு நேர்ந்திடின் இனி அதைத் தவிர்க்கலாம்; மாறாக,
செய்த தவற்றையே சொல்லியும் நினைந்தும் மீண்டும் மீண்டும் வருந்திக்கொண்டிருந்தால்
ஆட்சிமுறை சீர்கெடும் என்பது ஆட்சியாளர்க்குக் கிளந்த அறவுரையாகும். இதைப் பொது நிலையில் நோக்கின்,
தானே வருந்தத்தக்க தவற்றை/
இழிசெயல்களைச் செய்யலாகாது;
செய்துவிட்டால் திருத்திக்கொள்க;
மென்மேலும் தவறு செய்யக்கூடாது
என்று அறியலாம்.
ஆகவே, தவறுவது மனித இயற்கை , அதைத் திருத்திக்கொள்க என்னும் அறவுரை என்றைக்கும் எந்த ஆட்சி முறைக்கும் பொருந்தக்கூடியது.
இது ஆட்சியாளர்கள் சீராய்வு செய்து, திருத்தவேண்டியதையும்,
பொதுமக்கள் குற்ற/ இழி செயல்களைத் தவிர்க்கவும்
வலியுறுத்துகின்றது. மனிதச் செயல்பாட்டின் மாறுபட்ட இருமை நிலையை,
இரண்டு தொடர்களை இணைத்து, இருமைப் பொருண்மை அமைய
வள்ளுவம் வகுத்துரைப்பது, சமூக மேன்மை கருதி ஏற்றுச் செயல்படத்தக்கது.
*******
Comments
Post a Comment