பெரியசாமித் தூரன் பாடல்களில் பழனி முருகன்
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி.
ஆசிரியர், சிறாரிய
/ கொங்கு வட்டாரவழக்குப் படைப்பாளர், இசைவாணர்,
மொழிபெயர்ப்பாளர், கலைக்களஞ்சியப் பதிப்பர் போன்ற
தளங்களில் மேன்மையாக இயங்கித் தமிழுக்கு ஆக்கங்களை அள்ளித் தந்த பெரியசாமித் தூரன்
(1908-1987) பழனி முருகனையும்
பிற தெய்வங்களையும் போற்றி வாழ்த்திப் பாடியுள்ளார். தொல்பழங்காலந்தொட்டுத் தமிழர்களின் கடவுளாகத் திகழ்பவர்
முருகன். இன்றுவரை இந் நிலை தொடர்ந்து மென்மேலும் வளர்கின்றது.
முத்தமிழ் இலக்கியப் பாடுபொருளாக முருகன் விளங்குகின்றான். தூரனின் இசைப் பாடல்களில் காணலாகும் பழனி முருகனின் பெருமைகள் இக் கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகின்றன.
தூரன்:
கம்பநாடன் தரும் காவியம்
கேட்கவும்
இன்ப வாழ்க்கையே எய்த மெய்ம்மறை
தந்த வள்ளுவன் தமிழ் படிக்கவும்
என்ன புண்ணியம் செய்தேனோ
நான்
இந்த நன்னாட்டினில் வந்து
பிறந்திடவே! (இசைமணி
மஞ்சரி,
ப. 154 )
என்று பெருமைப்பட்டுக்கொண்டவர் பெரியசாமித்
தூரன். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; சீரிய படைப்புகள் மக்களால் சீராகப் போற்றப்படும்.
அம் முறையில் பாராட்டத்தக்க பன்முகப் பெருமைகளையும் பங்களிப்புகளையும்
வாய்ப்பாக்கியவர் பெரியசாமித் தூரன். இவரது படைப்பாளுமை பாராட்டுகளையும்
விருதுகளையும் வென்றது. இத்தகைய திறனாளர்/ உலக நலவேட்பாளர் வழிபடு கடவுளான முருகனை இசைத்தமிழால் மனமுருகிப் பாடியுள்ளார்.
முருகன்:
முருகு + அன்
> முருகன். கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாம்
இயற்கை அழகு + மாறா இளமை + வீரம்
+ அருளுடைமை ஆகிய நற்பண்புகளின் கூட்டாக அமைவது ‘முருகு’ என்னும் பழந்தமிழ்ப் பெயர்ச் சொல்லாகும்.
அறுபடைவீடு கொண்டு குன்றுதோறாடுகின்ற குமரன் ஆவினன்குடி / பழனி மலையில் அருளாட்சி ஆற்றிவருகின்றார். இவரை முருகன்,
தண்டாயுதபாணி, வேலாயுதன், முத்துக்குமரன், சின்னச்சாமி போன்ற பெயர்களால் அழைத்து
வழிபடுகின்றனர். பெருமைமிகு
பழனியைப் புலவர் பலரும் போற்றிப் பாடித் திளைக்கிறனர். பன்முகப்
பங்களிப்பால் பெருமைப்படுகின்ற பெரியசாமித் தூரனும் பழனி முருகனைப் பாடிப் புகழ்ந்துள்ளார்.
தூரனின் முருகன்:
தெய்வீகக் கலையான இசைத்
தமிழை / தமிழிசையை வளர்த்துப் பண்ணாராய்ச்சியில் ஈடுபட்ட மொடக்குறிச்சியைச் சார்ந்த
தூரன் பழனி முருகனைப் பாடிப் போற்றியுள்ளார். இவற்றில் முருகனின்
உருவழகு, அருட்டிறம், புராணச் செய்திகள்
ஆகியன விண்டுரைக்கப்பட்டுள்ளன.
கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய்க் காட்சியளிப்பது பழனியிலே!
மலைமகள் அருளிய சக்திவேல்
முருகன்!
மரகதவண்ணனாம் திருமால் மருகன்!
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தான்!
கார்த்திகைப் பெண்டிர் அணைப்பில் வளர்ந்தான் !
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான்!
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான் !
(இசைமணி மஞ்சரி, ப. 11 )
என்னும் இசைப்பாடல் யூடியூப் காணொலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. (https://www.youtube.com/watch?v=efYhjtDqyyQ) இன்றும் வானொலியில் ஒலியேறுகின்றது. கலியுகவரதன், சக்திவேல் முருகன், திருமால் மருகன், சிவனின் மைந்தன், விண்ணவர் குறை களைந்தவன் , பக்தர்களுக்கு வரம் வழங்குபவன் என்னும் முருகனின் இறைப் பண்புகள் இப் பாடலில் எடுத்துரைக்கப்படுகின்றன. அடுத்து,
பழம் நீ ! பழநிப்பதி வாழ் தெய்வப் பழம் நீ!
அழகின் வடிவே! அருளின் வடிவே!........ (இசைமணி மஞ்சரி, ப. 19 )
என்னும் பாடல் பழநி முருகனைத்
தெய்வப் பழமாகப் புராணக் கதையை மையமிட்டுப் போற்றி, அழகின் வடிவாகவும் அருளின் வடிவமாகவும்
ஆவினன்குடி குழந்தைவேலாயுதனாகவும் வாழ்த்திப் பரமபதத்தை அருள்பவனாக அடையாளப்படுத்துகின்றது.
மேலும் தனது வேண்டுதலை,
கழனிகள் சூழ் திருப்பழநிமலை நாதா!
மழலை மொழி வள்ளி மகிழு மலர்ப் பாதா!
மழவிடை யேறியோன் மைந்தனே! குகனே!
கழலிணை போற்றினேன் ! காத்திடவேண்டும்!
குழந்தையின் உள்ளமும் குற்றமில் செய்கையும்
பழந்தமிழ் போற்றும் நின் பதமலர்ப் பக்தியும்
கலையமுது இன்பமும் கவிதையின் ஊற்றமும்
மலைமகள் உதவிய வ்ள்ளலே! அருளுவாய்! (இசைமணி மஞ்சரி, ப. 64 )
என்று பழநிமலை நாதனின் இறைத்
தன்மைகளை விவரித்து, விண்ணப்பித்துள்ளார்., முருகனின் தொன்மையையும் இலக்கியப்
பாடுபொருளாய் அமைகின்ற வரலாற்றுக் குறிப்பையும் சுட்டி எண்ணச் சீர்மை; மாசிலா மனம் ஆகியவற்றை அருளுமாறு பணிகின்றார்.
ஆவினன்குடி வாழும் அழகுவடிவேலனே !
நெஞ்சில் ஒளியாக நீநின்று வழிகாட்டுவாய்! (இசைமணி மஞ்சரி, ப. 195 )
என்று கோரி, அழகுவடிவேலனை நல்வழிகாட்டுகின்ற
ஒளி விளக்காக உணர்கின்றார். இத்தகைய தெளிவு இருந்ததால்,
நமக்கொரு குறையேது? திருப்பழநி
நாதனருள் இருக்கும்போது ?
என்று உறுதிகூறி, தேவர் துயர்கெட அசுரரை மாய்த்தவன்!
செல்வமயிலேறி வந்தே அடியரைக்
காப்பவன்!
யாவர்க்கும் இன்னருள் எங்குமே நல்லின்பம்
ஈயும் அவன் மலர் இணையடி போற்றி வாழ் ! ( இசைமணி மஞ்சரி,
ப. 151)
வெற்றியருளும் வேலைப் பற்றி முருகன் நிற்க வீண்கவலை உனக்கேனோ நெஞ்சமே! (தமிழிசைப் பாடல்கள், தொகுதி 15; ப. 77) என்று முருகனின் அருட்டிறத்தை உணர்த்தி மனவுறுதி உண்டாக்குகின்றார். இவ்வாறாகப் போற்றிப் பாடல்களையும் இறைத் தத்துவ விளக்கப் பாடல்களையும் இசைத் தமிழில் தூரன் இயற்றியுள்ளார். இவற்றைக் கேட்போர் முருகனின் பெருமைகளையும் அருட்டிறத்தையும் தெளிந்து பயனுறுவர்.
அருள்மலை நொண்டி நாடகத்தில்
முருகன்:
தனது படைப்புகளில் முருகனைப் பெரிதும் போற்றி வழிபட்ட தூரன் பதிப்பித்த அருள்மலை நொண்டி நாடகத்தின் இறுதியில் இயல்கின்ற முருகப் போற்றியையும் இவண் ஒப்பல் தகும். கிபி 17ஆம் நூற்றாண்டில் ஈரோடு திங்களூருக்கு அருகிலுள்ள அருள்மலையில் அருள்பாலிக்கின்ற முருகனைப் போற்றிப் பாவனை முறையில் அவிநாசி நாவலன் இயற்றிய இந்த நொண்டி நாடகத்தின் ஏட்டுச் சுவடியை தெய்வசிகாமணிக் கவுண்டர் தர, ஏட்டிலிருந்து பெயர்த்தெழுதி, 1971ஆம் ஆண்டு திசம்பர் 25ஆம் தேதி சென்னையில் நடந்த 22ஆம் பண்ணாராய்ச்சிக் கூட்டத்தில் பெரியசாமித் தூரன் வெளியிட்டார். மதுரையைச் சார்ந்த பகல்வெத்தி என்பவன் மனைவியுடன் ஊடி, திங்களூருக்கு அருகிலுள்ள குருப்ப நாடு வருகின்றான். இளமையில் பொறுப்பாக வாழ்ந்தவன் போலி வேடமணிந்து வஞ்சகமாகத் திருடியும் விலைமாதரைப் புணர்ந்தும் நோயாளியாகின்றான். திருடிய குற்றத்திற்காக அரசால் கை,கால் வெட்டப்படுகின்றான். இறுதியில் அருள்மலை முருகனைப் பாடிப் பணிந்து நலமடைகின்றான் என்பது இந் நொண்டி நாடகத்தின் கதையாகும். இப் பாவனைச் சிற்றிலக்கிய நாடகத்தின் முதன்மை நோக்கம் இளைஞர்களை எச்சரிப்பதும், அருள்மலை முருகனைப் போற்றி வாழ்த்தலும் ஆகும். இந் நாடகத்தில் பல இடங்களில் முருகனின் பெருமை பேசப்படுகின்றது. முத்தாய்ப்பாக, இறுதியில் நொண்டி திருந்தி, நலமடைய முருகனை வேண்டுகின்ற கீழ்வரும் பகுதி முருகனடியோர்க்கு விருந்தாவதாகும்.
திருமகள் மருகா ! சேனாபதியே !
முருகனே! ஆறுமுகவனே ! பரனே!
மூலமந்திரத்தில் முளைத்த செந்திருவே!
கானகக் குறத்தி கணவனே! குகனே!
குஞ்சரி கணவா ! குமரா! காங்கேயா!
சஞ்சலம் அகற்றும் சடாச்சரப் பொருளே!
ஐயும் கிலியுமான பரனே!
மெய்யும் கிலியும் வீற்றிருந்தவனே!
கண்ணுக்குள்ளே கருணைச் சுடரே!
விண்ணுக்கப்பால் வெளியிலுற்றவனே !
தசைநரம்புக்குள்
வீற்ற மெய்ப்பொருளே!
திருநீறணிந்து
உன் திருத்தாள் படவே
வருவாய்! வருவாய்! மயிலேறியவா!
பெற்றோர் பிள்ளையை
வெறுத்தால்
மற்றோர் வளத்தினதுண்டோ?
அன்னையும் நீயே! அப்பனும் நீயே!
என் உள்ளத்தில்
இருப்பவன் நீயே!
ஏசுவது உனையே! புகழ்வதும் உனையே!
பேசுவது உனையே! பிதற்றுவதும் உனையே!
சொல்வதுனையே! துதிப்பதும் உனையே!
வல்வினை அதனால்
வருந்தினேன்! உன்சரண்!
வேலாயுதனே! வெண்ணீறிடவே
காலது வளரக் காட்சி
தந்தருள்வாய்!
என்று நான் போற்ற
இறையவன் அருள்சேர்
குன்றிலே கைகால்
கொடுத்து முன் எனக்குப்
பேர் நொண்டி என்று
பெருமையாய்த் திங்களூர்
நொண்டி என்று பேர்
கொடுத்திடவே! ( பக். 35&36 ) ப.6
இவ்வாறு குறையுணர்ந்து பாடிப்
பணிய, பகல்வெத்திக்குக் கை,கால் வளர்ந்து
இயல்பாகின்றன. திருமுருகாற்றுப்படை, கந்தரலங்கரம்,
கந்தர் சஷ்டிக் கவசம் போன்றவற்றின் தாக்கமுடையதாக இப் பகுதி அமைந்துள்ளது.
இதில் முருகனின் உருவ அழகு, புராணக் கதைகள்,
அருற்றிறம் போன்றவற்றோடு பக்தி உருக்கமும் புதைந்துகிடப்பதால் இதை வழிபாட்டுப்
பாடலாக முருகனிடம் விண்ணப்பித்தால் ஊனம் நீங்கும். இதைக் கொங்கு
நாட்டின் முருக வழிபாட்டு இலக்கிய வரலாற்றில் சேர்த்துப் பரப்பலாம்; பழனி நொண்டி நாடகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம் போன்றவற்றோடு
இதை ஒப்பிட்டாயலாம்..
பெரியசாமித் தூரனின் இலக்கியப் பங்களிப்புகளுள் பழநி முருகன் மீது பாடிய இசைப்பாடல்கள் சிறப்பின. இவற்றால் இறைவனின் உருவப்
பொலிவு, அருளாற்றல் போன்றவை வெளிப்படுகின்றன. தொல்தமிழ்க் கடவுளான பழநிமுருகன்மீது இவருக்கிருந்த பற்றும் நம்பிக்கையும்
ஆழமானவை. அதனால் பழநிப் பக்தி வரலாற்றில் தூரனின் இசைப்பாடல்கள்
சிறப்பான இடம்பெறவல்லவை.
துணைநூற்பட்டியல்
பெ. தூரன்,(பதி.) 1971, நொண்டி நாடகமும் அருள்மலை நொண்டியும், சென்னை: தமிழிசைச் சங்கம் [ 264-arulmalainondi www.tamilvu.org என்னும் இணைய முகவரியில் உள்ளது].
ம.ப. பெரியசாமித் தூரன், 1943, இசைமணி மஞ்சரி. சென்னை; தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம். [ 255 -isaimanimanjari www.tamilvu.org என்னும் இணைய முகவரியில் உள்ளது].
ம.ப. பெரியசாமித் தூரன், 1947, தமிழிசைப் பாடல்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் [ 253- tamilicaipadalkalvol15 என்னும் இணைய முகவரியில் உள்ளது]
கொழந்தசாமி.ப.,2015, ம.ப. பெரியசாமித் தூரன்,
சென்னை; கலைஞன் பதிப்பகம்.
___________
Comments
Post a Comment