வள்ளுவம் காட்டும் ‘காட்சியவர்’
பேராசிரியர்
குழந்தைசாமி, புதுச்சேரி
ஆறறிவும்
அளவிலா ஆற்றலும் புத்தாக்கச் சிந்தனையும் வாய்த்த மானுடன் உணர்ச்சிகளால் உந்தப்படுகின்றான்.
அதனால் சிக்கலுக்கு ஆளாவதுடன் வளர்ச்சியும் வாய்ப்பாவதில்லை. பிறழ் உணர்ச்சி மேலெழும் போது அறிவு என்னும் பகுத்தறிவை
முன்னிறுத்தின் தகாத உணர்ச்சிகளைத் தவிர்த்து, சீரான வாழ்வை வாய்ப்பாக்கலாம் என்பது
வள்ளுவ விழுமியமாகும். இத்தகைய உணர்ச்சி மேலாண்மைச் சீர்மையைப் பெற்ற ஆன்றோர்களை ’காட்சியவர்
/ காட்சியார் ‘ என்று வள்ளுவம் சுட்டுகின்றது. தொல்காப்பியம் களவியலில் தலைவி கூற்றாக,
உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (நூற்பா 1059; 1-2 )
என்று அறிவாண்மையின்
தேவையை வலியுறுத்தியுள்ளார். பொருளீட்டப் பிரிந்த
தன் தலைவனை அகநானூற்றுத் தலைவி,
நன்றுபுரி காட்சியர்…….. ( அகம்,
பா 245;02 )
என்று பாராட்டுகின்றாள்.
திருமுருகாற்றுப்படைமுனிவோர் சீர்மையை,
செற்றம்
நீக்கிய மனத்தினர் ;யாவதும்
கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர் ;காமமொடு
கடும் சினம் கடிந்த காட்சியர் ;இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்; மேவரத்
துனி இல் காட்சி முனிவர் ( முருகு 132-137 )
என்று அடையாளப்படுத்துகின்றது.
மேற்கூறிய அறிவாண்மையும் ஆள்வினையுடைமையும் பொறுப்புடைமையும் உணர்ச்சித் தகைமையும்
கட்டுப்பாடும் உயிரிரக்கமும் ஆகிய ஆன்ற பண்புகளைக்
கொண்ட செயல்பாட்டாளராகத் திகழ்வாரைக் காட்சியவர் என்று174, 199, 218, 258, 352, 654, 699 ஆகிய குறட்பாக்களில் வள்ளுவம் போற்றுகின்றது.
மேலும்,
புலம்வென்ற புன்மையில் காட்சியவர் ( குறள் 174)
போன்ற கருத்தாக்கங்கள் ஊன்றி நோக்கத்தக்கன.
இத்தகைய விழுமியங்கள் மானுட மேம்பாட்டுக்கு அடித்தளமாகின்றன.
நன்றி : இணைய தளங்கள். ----------
Comments
Post a Comment