188ஆம் குறட்பாவின் பிறழ் உணர்ச்சிப் பொருண்மை
பேராசிரியர் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
அற இலக்கியமான திருக்குறள்
இலக்கியவியல் / இலக்கணவியல் / உளவியல்
/ தத்துவ ஆய்வுகட்கு வாய்ப்பாவதால். ஒவ்வொரு குறட்பாவையும் பல்துறை
நோக்கில் நுட்பமாகக் கருத்துணரவேண்டும். அந் நிலையில் 188ஆம் குறட்பா விளக்குகின்ற விழுமியத்தைத் தெளிய, அதன்
தொடரமைப்பு அறியப்படலாம்.
தமிழில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்கின்ற தொடரமைப்புப் பொதுவாக இயலும். ஆயினும்
வேற்றுமை அமைப்பால் இம் முறைமை மாறுவதுமுண்டு. இதோடு தொடரில்
அமைவேண்டிய சொற்கள் இடம்பெறாமல் விடுபடலாம்; சொன்ன கருத்தோடு
சொல்ல விழைகின்ற செய்தியையும் இடைச்சொற்களின் உணர்ச்சிப் பொருண்மையையும் உய்த்தறியலாம்.
இதற்கு உரைகள் உறுதுணையாகின்றன. இதன் அடிப்படையில்
188ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மையை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது.
188ஆம் குறட்பா:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு (188 )
என்னும் குறட்பா வினாத் தொடரில் அமைந்து ஆழ்ந்த
சிந்தனைக்கு வாய்ப்பாகின்றது. நண்பர்களையே புறஞ்சொல்வோர்
அயலாரைப் பற்றிக் கூறமாட்டார்களா? என்பது குறட்பாச் சொல்கின்ற
செய்தி. ஆனால் இதில் பயில்கின்ற உம், கொல்
ஆகிய இடைச்சொற்களால் ஈர்ப்பான உணர்ச்சிப் பொருள் சுட்டப்படுகின்றது. நிகழ்காலப் பெயரெச்சமான தூற்றும் என்பது பலரறியப் பரப்புதலைச் சுட்டுகின்றது. குற்றமும் என்பதிலுள்ள ‘உம்’ என்கின்ற இடைச்சொல் துன்னியாரின் இழிவைக் குறித்தும், புறஞ்சொலலில் அவருக் குள்ள ஆவலின்
பிறழ் உளவியல் பற்றியும் இழித்துரைக்கின்றது. அடுத்ததாக, என்ன
என்னும் பொருளுடைய என்னை என்கின்ற வினையும், கொல் என்னும் இடைச்சொல்லும் புறஞ்சொல்லலின்
கொடுமையை எடுத்துரைக்கின்றன. ‘என்னைகொல் ஏதிலார் மாட்டு ‘ என்னும்
தொடரில் செய்வது என்னும் சொல் இல்லை; அதை வருவித்துக்கொள்ளலாம்.
விடுபட்ட சொல்லை வருவித்தும்; இடைச்சொல்லின் உணர்ச்சிப் பொருண்மையை அறிந்தும் தெளிந்தால்
குறட்பாவின் கருத்தை முழுமையாகப் பெறலாம்.
நன்றி: இணையத் தரவுகள் *********
Comments
Post a Comment