798ஆம் குறட்பாவின் பொருண்மையும் சமூக உறவியல் விழுமியமும்

                                     பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            ஒரு பனுவலில் பயில்கின்ற சொற்கள் அனைத்தும் பொருளுடையன; படைப்பாளரின் கருத்துகளை வாசிப்பார்க்குக் கடத்துவன. ஆயினும் சொற்களைத் தொடரில் அமைக்கின்றபோதே  சொல் உணர்த்துகின்ற கருத்துப் புலனாகும். அதோடு ஒரு தொடர் இயல்கின்ற சூழலும் நோக்கத்தக்கது. இதைப் பொருள் இலக்கணத்தில் திணை, துறை என்றும் திருக்குறளில் பால், அதிகாரம் என்றும் சுட்டுகின்றனர். எனவே ஒரு குறட்பாவை அது பயில்கின்ற அதிகாரத்தை நோக்கிப் பொருளுணரவேண்டும்.  அம் முறையில் ,

உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு ( 798 )

 என்னும் குறட்பாவை அணுகலாம். பொருட்பாலின் நட்பாராய்தல் அதிகாரத்தின்  எட்டாவது குறளான இதில்,

மனவெழுச்சியைத் தாழ்த்துகின்ற எண்ணங்களுக்கு வாய்ப்பளிக்காதே !

[அதைப் போல] துன்ப காலத்தில் உதவாத நட்பைத் தொடராதே!

 

என்னும் கருத்துடைய  இரு தொடர்கள் உள்ளன.  இதில் எடுத்துக்காட்டுவமை அணி  அமைந்துள்ளது. அதாவது அதைப் போல என்னும் ஒப்புமை இவ் இரு தொடர்களுக்கு இடையில் இயல்கின்றது.  இருமைப் பண்பை ஒப்பிட்டுக் காட்டுதல் வள்ளுவத்தின் இயல்பாகும். திருக்குறளின் முதற்குறளே இவ்வாறானது. அதற்கேற்ப இக் குறட்பாவில்  வாய்ப்பளிக்காதே: தொடராதே என்னும் இரண்டு வினைமுற்றுகள் / அறவுரைகள் உளவியல் & சமூக உறவியல் விழுமியங்களாக வகுத்துரைக்கப்பட்டுள்ளன. முன்னேற்றத்தைச் சிதைக்கின்ற எண்ணங்களுக்கு இடமளிக்கலாகாது, அவ்வாறே நண்பனின் பண்பை அறிவதற்குச் சில சூழல்கள் வாய்ப்பாகின்றன.  தன்னோடு இயல்பான சூழலில் நட்பாடுபவர், தான் துன்பப்படும்போது உதவாமல் இருந்தால் , அவர் உண்மையான நண்பராகக் கருதப்படமாட்டார். இக் குறட்பாவில் அமைகின்ற  உள்ளற்க / கொள்ளற்க என்னும் எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுகள் உன்னத்தக்கன. உள் + அல் + க / கொள்+ அல் + க என்னும் சொல்லாக்க  ஒட்டுமுறைக் கட்டமைப்பில், வினைப் பகுதியுடன், அல் என்னும் எதிர்மறை இடைநிலையும் என்னும் வியங்கோள் விகுதியும் ஒட்டப்பட்டுச் சொற்கள் ஆக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு கருத்தை வெளிப்படுத்துகின்றன. இவண் ஆற்றறுப்பார் என்னும் பலர்பால் வினையாலணையும்பெயர்  உறுதுணையாகாமல் கைவிடுவோர் என்னும் கருத்தில் இயல்கின்றது. இவ்வாறாக, இரு கருத்துகளை இயைத்து உளவியல் & சமூக உறவியல், விழுமியங்களாக வள்ளுவம் அறமுரைத்துள்ளது. ஒவ்வொரு குறட்பாவையும் இங்ஙனம் பொருண்மை அறியின் வள்ளுவ வாய்மை தெளிவாகி மானுடம் வெல்லும்.

நன்றி: இணையத் தரவுகள்.

                                        --------------------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு