திருக்குறளில்எண்பதம்’ / ‘தண்பதம்’ : பொருண்மையமைப்பு

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            மொழியின் அடிப்படைப் பயன்பாடு கருத்துப் பரிமாற்றம் ஆகும். இதற்காகச் சொற்கள், எழுத்துகள் ஆகியன ஆளப்படுகின்றன. ஒவ்வொரு சொல்லுக்கும் சொற்பொருளும் கருத்தும் அமைகின்றன. அதாவது அகராதிப் பொருளும், தொடர்ப் பொருண்மைச் சூழலுக்கேற்ற கருத்தும் இயல்கின்றன. சான்றாக, பனைமரம் என்னும் தொடர் மரத்தையும், உயரமாக வளர்ந்தவனையும் சூழலுக்கேற்பச் சுட்டுகின்றது. மேலும் பல சொற்கள் பொருட்பன்மையில் பயில்கின்றன. இதனால் ஒரு பனுவலைக் கற்கையில் மயக்கத்தைத் தவிர்க்கச் சூழலுக்கேற்ற சொற்பொருண்மை அமைப்பை அறிந்து தெளியவேண்டும். இம் முறையில் திருக்குறளில் எண்பதம்’ / ‘தண்பதம்ஆகிய சிறப்புச் சொற்களின் பொருண்மையமைப்பை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

எண்பதம்’ / ‘தண்பதம்’ :

            பெருமையுடைய திருக்குறள் சொல்லேருழவர் போன்ற நடைப் புதுமைகளையும் கொண்டுள்ளதால் தமிழ்ப் பொருண்மையியல் ஆய்வுக் களனாகின்றது. இதை உணர்ந்து உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். பொருண்மையியல் நோக்கில் இதை அணுகின் தெளிவு வாய்க்கும். சான்றாக,

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பத
த்தான் தானே கெடும் (548 )

என்னும் குறட்பாவை ஆயலாம் குடிமக்கள் மன்னனை எளிதில் கண்டு, தம் குறைகளையும் தேவைகளையும் முறையிட்டுத் தீர்க்க வாய்ப்பளிக்காத ஆட்சியாளர் மக்களின் வெறுப்புக்கும் பழிக்கும் ஆளாகி விரைவில் ஆட்சியிழப்பார் என்பது இவண் சுட்டப்படுகின்றது. அரசியல் / செங்கோன்மை சார்ந்த நல்லாட்சிக் கோட்பாடு, எதிர்மறையில் எச்சரிக்கப்பட்டுள்ளதுமக்களை மையமிட்டு உள்ளடக்கி, ஆட்சி நடக்கவேண்டும் ; இறையாக மன்னன் ஆளவேண்டும். மாறாகக் குறையுடன் மக்கள் வாழ்ந்தால் நாட்டு வளர்ச்சியும் அரசு மீதான மதிப்பும் குறைந்துவிடும். இத்தகைய இழியாட்சி ஒழிந்துவிடும் என்பதை எச்சரிக்கின்ற வள்ளுவம்தானே கெடும் என்று கடிகின்றது. இதில் எண்பதம் மக்கள் எளிதில் முறையிடுகின்ற நிலையையும், தண்பதம் மக்களால் பழிக்கப்படுகின்ற , வெறுப்புக் கொண்ட நிலையையும் சுட்டுகின்றன. அதாவது, பதம்= நிலைமை; எண் = எளிமை; தண்= இழிமை என்னும் சிறப்புப் பொருண்மையமைப்பு இவண் இயல்கின்றது. உள்ள இழிநிலையைக் காட்டி, மக்களின் குறை / தேவை ஆகியவற்றை அறிந்தும், இவை குறித்து அரசவையில் மக்கள் எளிதாக முறையிட வாய்ப்பளித்தும், தேவையை நிறைவேற்றியும் நல்லாட்சி நடைபெறவேண்டும். மாறான வல்லாட்சி அழிந்துவிடும்.  மக்களாட்சிக்கு வழிகாட்டுவதாக / உயர்வுக்குப் பாதையமைப்பதாக இக் குறட்பா அமைக்கப்பட்டுள்ளது. ஓர்ந்து, முறைசெய்வதாக ஆட்சி இயலவேண்டும் என்னும் என்றைக்கும் ஏற்பான / மானுட வெற்றிக்கான ஆட்சியியல் அறத்தை இக் குறட்பா வலியுறுத்துகின்றது.  

நன்றி : இணையச் செய்திகள்.

                                                    _____________

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு