திருக்குறளில் ‘ அடை’ – ஒப்புருப் பொருண்மை

                பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

  உயர்தனிச் செம்மொழியான தமிழின் பொருண்மை வளம் சீரியது; செறிவானது. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் தொடர்ச் சூழல் நோக்கிக் கருத்துணரமுடியும். காலத் தொன்மையாலும் வட்டார வழக்காலும் சொற்பொருண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இலக்கண அறிவினால் கருத்தறியலாம். அந் நிலையில் திருக்குறளில்  ’அடை’ என்னும் ஒப்புருச் சொல் இயலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை அமைந்துள்ளது.

‘அடை’ பொருள் :

பழந்தமிழ்ச் சொல்லான இது, இன்றைய வழக்கிலும் இயல்கின்றது. பெயராக உணவுப் பொருள்/ பெயரடை ; வினையாக சேர்தல், மூடுதல் ஆகிய பல பொருளில் ஆளப்படுகின்றது. இலக்கியங்களில் மேலும் பல பொருளில் வழங்கப்படுகின்றது. சொல்லாட்சிப் புதுமைகளைக் கொண்டுள்ள வள்ளுவத்தில்,

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல் (38 )

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும் (71)

ஆகிய குறட்பாக்களில் ’மூடுதல்’ என்கின்ற செயப்படுபொருள்குன்றா வினையமைப்பில், பெயரெச்சமாக அமைகின்றது. 

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயங் கொளின் (939 )

என்னும் குறட்பாவில் வந்துசேர்தல் / கிடைத்தல் என்று செயப்படுபொருள்குன்றா வினையமைப்பில், வினைமுற்றாக அமைகின்றது. இவ்வாறு திருக்குறளில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லையும் சொற்பொருண்மை  நோக்கில் அணுகித் தெளியின் வள்ளுவத்தின் சீர்மையும், விழிமியத்தின் வீச்சும் புலனாகும். இதற்கு இலக்கண அறிவும் துணையாகும்.

நன்றி: இணையத் தரவுகள்               ***

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு