புறநானூற்றின் அடிப்படையில் ‘வரிசை’ வகுக்கின்ற வள்ளுவம்

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

அறத்துப்பாலில் தனிமனித அறங்களையும் பொருட்பாலில் சமூக, அரசியல், பொது வாழ்வியல் நெறிகளையும் வகுத்துரைக்கின்ற வள்ளுவம்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்(972)

என்று அனைவரும் இணையானோர்; திறன் அடிப்படையில் வேறுபாடு இருக்கலாம் என்று சுட்டி, இதை வழிமொழிவதாக,

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் (528)

என்னும் குறளை அமைத்துள்ளார். அனைவரையும் ஒரே நிலையில் பார்க்காதே ; தகுதியறிந்து மதிக்க; பாராட்டுக என்பது அரசியல் விழுமியமாகும். சுற்றம் காக்கவேண்டிய ஆட்சித் தலைமை, அரசுப் பணியாளரின் அறிவுத் திறன், ஆளுமைச் சீர்மை, கடமையுணர்வு, பங்களிப்பு ஆகியவற்றைப் போற்றி விருதளித்து ஊக்கலாம். இதனால் அரசனைச் சுற்றிலும் திறனாளர் சூழ்ந்திருப்பர்; அரசுப் பணிகள் செம்மையாக இயலும். இங்கு வரிசை  என்பது தகுதி / திறமைக்கேற்ற மதிப்பு என்னும் பொருளில் பயில்கின்றது. அன்றைய முடியரசனுக்கு வகுத்த இவ் அறநெறி இன்றைய குடியாட்சி முறையிலும் பின்பற்றப்படுகின்றது.  இக் குறட்பாவில்,

ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின்,

5

பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! (பா121)

என்னும் புறநானூற்றின்  தாக்கம் காணப்படுகின்றது. மேலும் பழங்காலத்திலிருந்தே அரசியல் கொள்கைகள் தமிழகத்தில் நிலவி வந்ததும் தெளிவாகின்றது.

நன்றி: இணையத் தரவுகள்.              ******

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு