‘உரு’ வழியே வள்ளுவம் வகுக்கின்ற விழுமியங்கள்
பேராசிரியர் புதுவை குழந்தைசாமி,
பஞ்சலிங்கபுரம்
திருக்குறள் விளம்பு விழுமியங்களாலும்
இலக்கிய முருகியலாலும் சீர்மையுடையதாக விளங்குகின்றது. நூலின்
ஒவ்வொரு சொல்லும் பொருண்மை மதிப்புடையன. எனவே அனைத்துச் சொற்களையும்
நோக்கிக் கருத்துணரலாம். அம் முறையில் ‘உரு’ என்னும் சொல் வழியே
வள்ளுவம் வகுக்கின்ற விழுமியங்களைத் தெளிவுறுத்துவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.
உரு
-
கருத்து :
இன்றைய பேச்சு / இலக்கிய வழக்கில் வடிவத் தோற்றம் என்னும் கருத்தில் இது பயில்கின்றது.
தொல்காப்பியத்தில் பெயர்ச்சொல்லாக உருவம், வடிவு,
தோற்றம் ஆகிய பொருளிலும் ; உரியியல் மூன்றாம் நூற்பாவில்
அச்சம் என்னும் பொருளிலும் இச் சொல் பல்பொருட்சொல்லாக
இயல்கின்றது.
திருக்குறளில்
உரு :
மொழித் தொழில்நுட்பங்களைச் செவ்வனே
கையாண்டு படைக்கப் பட்டுள்ள வள்ளுவத்தில்
,
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (261)
என்று இலக்கணம்; எடுத்துக்காட்டு என்னும் கருத்தில் இயல்கின்றது. அடுத்து,
அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு (684)
என்னும் குறட்பாவில் ‘அழகிய தோற்றம் ’ என்னும் பொதுப் பொருளில் பயில்கின்றது. மேலும், இதன் நடைவேறுபாடாக, உருவம்,
வலியில் நிலைமையான் வல்உருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (273)
என்று போலித் தோற்றம்
என்னும் கருத்தில் இயல்கின்றது. அடுத்து, உருவு என்று,
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று (585)
என இயல்பான புறத் தோற்றம் என்னும் பொதுப்பொருளிலும்,
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து (667)
என்று எளிய வடிவம் என்னும் கருத்திலும் ஆளப்பட்டுள்ளது. உருவு என்னும் பழஞ்சொல் பெயராகவும் வெளியே எடு; நீவு என்னும் கருத்தில் வினையாகவும் (இடையாகவும்) இன்றளவும் வழங்கப்படுகின்றது.
இவ்வாறாக , வள்ளுவம் உரு, உருவம், உருவு ஆகிய வடிவங்களை, எடுத்துக்காட்டு, அழகிய தோற்றம், போலித் தோற்றம், புறத் தோற்றம், எளிய வடிவம் ஆகிய கருத்தில் பெயராக ஆண்டு, பொருண்மைச் சிறப்பைப் பெறுகின்றது.
‘உரு’ வழியே விழுமியங்கள்:
வல்லாருக்கு
எடுத்துக்காட்டாய் வாழுங்கள்
போலிமை வேண்டாம்; உண்மையாக நடக்கவும்
பணிக்கேற்ற தோற்றம் தேவை
எளிமையாக இருப்பாரை எள்ளவேண்டாம்
ஆகிய விழுமியங்கள் மேற்கண்ட குறட்பாக்களில்
’ உரு’ என்னும் பெயர் வழி வகுத்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிந்து
பரப்பினால் மானுடம் வெல்லும்; உலகம் உய்யும்.
நன்றி: இணையத் தரவுகள்
********
Comments
Post a Comment