பொருண்மைக் கூறு அடிப்படையில் பகு / பகாப்பதங்கள்
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உயர்தனிச் செம்மொழியான தமிழ்
ஒட்டுமொழி ஆகும். அதனால் பொருண்மைக் கூறுகளை முறைப்படி இணைத்துச் சொற்கள்
ஆக்கப்படுகின்றன. சொற்பாகுபாட்டில் பகுபதம், பகாப்பதம் என்பன பொருண்மைக் கூறு
அடிப்படியில் அமைந்தவை என்பதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. நன்னூலின் பதவியலில் கூறப்படும் சொல்லாக்க மரபுகள் இவண் உற்றுநோக்கத்தக்கன. பகுபதம், பகாப்பதம் என்பனவற்றில் பகுத்தால் பொருள் உணர்த்தும் பண்பு, அதாவது ஒரு சொல் ஒரே பொருட்கூறு உடையதாக இருப்பின் பகுபதம்;
ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட் கூறுகளைப்
பெற்றிருந்தால் பகுபதம் என்னும் பொருண்மை நுட்பம் உன்னத்தக்கது. நன்னூலின்,
பகுப்பால் பயனற்று
இடுகுறி யாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற (நூ.131)
என்னும் கருத்துரு
மேற்கூறிய பொருண்மை நுட்பத்தைத் தெளிவுபடுத்துகின்றது. அதாவது, தனியோர்
உருபோ உருபனோ அமைவதைப் பகாப்பதம் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உருபுகளோ உருபன்களோ இணைந்தமைவதைப் பகுபதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சான்று:
பகாப்பதம் : கை, வா.
பகுபதம் : காத்தல் (கா +தல்), வருக( வரு+க ), தங்குகிறான்(தங்கு+கிறு
+ஆன்).
பொருட்கூற்றாய்வின் அடிப்படையில் கை, வா ஆகிய சொற்கள் ஒரேயொரு
பொருண்மைக் கூறால் ஆக்கப்படிருப்பதால் பகுக்க இயலாது; வலிந்து பகுப்பின் பொருள்
பயக்காது. தங்குகிறான் என்னும் பகுபத வினைமுற்றை ஆராய்ந்தால், இதில் தங்கு+ கிறு +ஆன் என்னும் மூன்று பொருட்கூறுகள் இருப்பதை
அறியலாம். இவற்றுள் தங்கு என்னும் பகுதி செயலையும், கிறு எனும் கால இடைநிலை காலத்தை யும், ஆன் எனும் பால்காட்டும் விகுதி செய்பவனையும் உணர்த்துவனவாக அமைந் துள்ளன. இங்ஙனம்
இலக்கணக் கலைச்சொற்களை நுட்பமாக நோக்கின் கற்பித்தலும் கற்றலும் ஆய்வும்
சிறக்கும்.
நன்றி :
இணையத் தரவுகள்
****
Comments
Post a Comment