ஆம்/ போம் : மண்ணில் நல்லவண்ணம் வாழ நல்வழி

Voice against PROCRASTINATION

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

பெருமை சான்ற மானுட வாழ்க்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதாகும்; ஆனால் இறப்பு எப்போது நேரும் என்று கணிக்கவியலாது. அதனால் ஒவ்வொரு நாளையும் நல்வாய்ப்பாக நிறைவாக அமைத்துக்கொண்டு கடமையாற்றவேண்டும் என்பது அறநெறி/ உயரிய வாழ்க்கை முறை / மானுட இயங்கியல்.  சோம்பலால் தள்ளிப்போடல் தவறான பழக்கமாகும் என்பதை,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை ( குறட்பா 36 )

என்னும் திருக்குறள் வலியுறுத்துகின்றது. பிறகு செயலாற்றலாம் என்று எண்ணாமல் திட்டமிட்டு உடனுக்குடன் உயர்வை வாய்ப்பாக்கலாம். இயலாமையைப் புறந்தள்ளி ஆக்கத்தை வாய்ப்பாக்கலாம். இது தனிமனித முன்னேற்றத்திற்கும் சமூக மேம்பாட்டுக்கும் புதியன கண்டுபிடித்தலுக்கும் மானுட வெற்றிக்கும் அடித்தளமாகும். இத்தகைய ஆக்கக் குரல்,

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
              மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
              ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
              தீதொழிய நன்மை செயல்( நல்வழி, பா 01 )

என்று ஒப்பீட்டு நோக்கில் அவ்வையாலும் ஒலிக்கப்பட்டுள்ளது.  இப் பாடலில் புண்ணியம் என்பது ஆக்கத்தையும், பாவம் என்பது அழிவையும் கருதுகின்றன. ஒவ்வொரு மனிதனும் அவன் செய்கின்ற செயல்களால் மதிப்பிடப்படுவதால், நன்மை செய்வதில், கடமையாற்றுவதில் தவறலாகாது; சோம்பலால் காரணமின்றித் தள்ளிவைக்கலாகாது. இத்தகைய நல்வழியை அனைவரும் கைக்கொண்டால் உறுதியாக மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்.

நன்றி : இணையத் தரவுகள்                                              *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு