திருக்குறளில் ‘அற்கா’ × ‘ அற்குப’முரண்மை

                                          புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

மனித எண்ணங்களும் வாழ்வியலும் ஏற்றத்தாழ்வுடையவை; மாறுபடக் கூடியவை. அதனால் வாய்க்கும்போதெல்லாம் அறச்செயல்களை உடனுக்குடன் செய்துவிடவேண்டும் என்று அற இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. இந் நிலையில்,

அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
             அற்குப ஆங்கே செயல் (333)

என்னும் குறட்பா உன்னத்தக்கது.  இக் குறட்பாவில், செல்வம் நிலையற்றது; அதனால் உள்ளதைக் கொண்டு உடனுக்குடன் நலம்புரிக என்னும் இரண்டு தொடர்கள் அமைந்துள்ளன. இயல்பால் நிலையற்றதைச் செயலால் நிலைநிறுத்துக என்னும் முரண்மை செல்வத்தின் நிலையாமையைத் தெளிவித்து, நன்மை வளர வலியுறுத்துகின்றது. அல்குதல் என்பதற்குத் தங்குதல் / நிலைபெறுதல் என்று பொருள்; ஓசையினிமை நோக்கி ற்கா, ற்குப என்று குறளில் இடையினம் வல்லினமாகத் திரிந்தது.  பொருள் சேர்தலின் அருமை பெற்றால் என்னும் வினையெச்சத்தால் உணர்த்தப்படுகின்றது;  ஆங்கே என்னும் சேய்மை இடப்பெயரால் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் நலம்புரிக என்னும் கருத்து வலியுறுத்தலாகின்றது. பொதுவாக, எந்தவொரு செல்வத்தையும் அடைந்தோர் அதைச் சேமிக்க விழைவர். தேவைப்படும்போது / வாய்க்கும்போது அறம் செய்யலாம் என்று தள்ளிப்போடுவர். ஆனால் சேமித்த பொருள் அறம் செய விரும்பும்போது வாய்க்குமா? / குடும்பத்தார் அனுமதிப்பார்களா? இடையில் வேறு தேவை ஏற்படுமா? என்று ஆராயவேண்டும்.  இவற்றைத் தெளிந்து நலம்புரிக என்று நிலைபேற்றின் முரணை இக் குறட்பா எடுத்துரைக்கின்றது.

            நன்றி: இணையத் தரவுகள்                ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு