வள்ளுவத்தில் பெயராகவும் உரியாகவும் ‘வாள்

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

விளம்புகின்ற விழுமியங்களாலும் சொல்லாட்சிச் சீர்மையாலும் உலகப் புகழ் பெற்றுள்ள வள்ளுவம், வாள் என்னும் பழந்தமிழ்ப் பெயர்ச் சொல்லைப் பொருட்பன்மையில் ஆண்டுள்ளதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது. வீட்டிலும் காட்டிலும் போர்க்களத்திலும் ஒன்றை வெட்டற்குப் பயன்படும் கருவி வாள் . இது இன்றைய வழக்கிலும் பெயர்ச்சொல்லாகப் பயில்கின்றது. இதோடு தொல்காப் பியம் உரியியல் 69ஆம் நூற்பாவில் சுட்டுமாறு ஒளி என்னும் பொருளிலும் வள்ளுவத்தில் பயில்கின்றது [ வாள் நுதல் ]. இம் மொழி மரபில் வள்ளுவம்,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாள
து உணர்வார்ப் பெறின் ( 334 )

என்றும், 614, 726, 727, 882 ஆகிய குறட்பாக்களிலும் வாள் என்னும் சொல்லைப் பெயர்ச் சொல்லாக ஆண்டுள்ளது. இதோடு, ஒளி என்னும் பொருளில் உரிச்சொல்லாக,

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் ( 1261)

என்னும் குறளில் இயல்கின்றது. தலைவனைப் பிரிந்து ஆற்றியிருக்கின்ற தலைவியின் ஏக்கத்தை / நலிவை ஒளியிழந்த கண்; தேய்ந்த விரல் ஆகியவற்றால் இதில் வெளிப்படுத்துகின்றார்.  தலைமக்களிடையேயான அன்புப் பிணைப்பை வெளிப்படுத்துகின்ற  இக் குறட்பா உளவியல் நோக்கில் உன்னத்தக்கது. இங்ஙனம் கருவி / ஒளி என்னும் இரண்டு பொருளில் வாள் பெயராகவும் உரியாகவும் பயில்கின்றது. வள்ளுவத்தின் ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்துணரின் வள்ளுவ விழுமியத்தையும் முருகியலையும் தெளியலாம்.

  நன்றி: இணையத் தரவுகள்                    ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு