வினையியலில் பொருண்மைக் கொள்கைகள்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தரவுகளின் அடிப்படையில் அறிவியல்
பாங்குடன் தமிழை ஆய்கின்ற விளக்கவியல் நூலான தொல்காப்பியம் தொடரை அடிப்படை மொழியலகாகக்
கொண்டு,
வாய்பாடுகளால் இலக்கணம் வகுத்துள்ளது. அதனால் ஒவ்வொரு
நூற்பாவும் தொடர் இலக்கணக் கொள்கைகளாக அமைகின்றன. பெயர்,
வினை, இடை, உரி ஆகிய சொற்கள்
இலக்கண, பொருண்மை முறைப்படி இணைந்து தொடரை ஆக்குகின்றன.
ஒரு தொடரில் எழுவாயின் இயக்கத்தைத் தெரிநிலை வினைமுற்றும் [ முருகன் வருகின்றான் ] ; எழுவாயின் இயல்பைக் குறிப்பு
வினைமுற்றும் [ முருகன் நல்லவன் ] சுட்டுகின்றன.
சில தொடர்களில் எழுவாய் புற நிலையில் தோன்றாமல் இயல்வதுமுண்டு
[ எனக்குத் தந்தான் ]. இவற்றுள் தொடரில் வினைச்சொல்லின்
இயக்கத்தை எடுத்துரைக்கின்ற தொல்காப்பிய வினையியல் , 203ஆம் நூற்பாவில்
ஏழு தன்மையொருமை வினைமுற்றுகளைப் பட்டியலிட்டு , அடுத்த நூற்பாவில்,
அவற்றுள் செய்கு என் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர் ( நூ. 204 )
என்னும் பொருண்மைக் கொள்கையை வகுத்துரைக்கின்றது. அதாவது ஒரு தொடரில் ஒரு வினைமுற்றே
அமையும்; ஆனால் செய்யுள் தொடரில் ‘காண்கு வந்தேன்’
என்னுமாறு
அரிதாக இரண்டு தன்மையொருமை வினைமுற்றுகள் ஒருங்கே அமைவதுண்டு;
சூழல் நோக்கிக் கருத்துணரவேண்டும். இதை நன்னூல்,
செய்கு என் ஒருமையும் செய்கும் என் பன்மையும்
வினையொடு முடியினும் விளம்பிய முற்றே ( நூ. 333 )
என்று வழிமொழிகின்றது.
அடுத்து, வினையின் பொதுவியல்பைத் தொல்காப்பிய வினையியலின்
முதல் நூற்பா,
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது;
நினையுங்காலை காலமொடு தோன்றும்
என்று வினைச்சொல்
வேற்றுமை ஏலாது ; மூன்றுள் ஒரு காலத்தைக்
காட்டும்; வினையாலணையும்பெயர் காலம் காட்டும்
என்னும் பொருண்மைக்
கொள்கைகளை வகுத்துரைக்கின்றது. எனவே வினையின் இயல்பைத் தெளிந்து பொருளுணர
நூற்பாவின் கொள்கை விளக்கத்தை நோக்கவேண்டும்; அதனால் இலக்கியங்களின் பொருண்மையையும்
இயல்பாக விளங்கிக்கொள்ளலாம்.
நன்றி: இணையத் தரவுகள் ---------
Comments
Post a Comment