தன் கருத்தைப் பிறர் வாயால்  கூறுவித்தல்

புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்

            உயிரினங்களுள் உயர்ந்ததான மானுடம் கருத்தாடலில் மேன்மையானது. உணர்ச்சிகளையும் தேவைகளையும் அறிவையும் உரியவர்க்கு உணர்த்த உடல் இயக்கமும் மொழியும் மனிதர்க்கு வாய்ப்பகின்றன. தொல்காப்பியர் மெய்ப்பாடு / கூற்று என்று இதை இலக்கணப்படுத்தியுள்ளார்.  கருத்தாடலின் தேவைக்கேற்ப வெளிப்பாட்டு முறை அமையும். அவற்றுள் ஒன்று தன் கருத்தைப் பிறரைக்கொண்டு உணர்த்துவதாகும். நுட்பமான, நேரடியாகக் கூற விரும்பாத செய்தியைக் குறிப்பாக வெளிப்படுத்துவதை உள்ளுறை, இறைச்சி, முன்னம் என்று தொல்காப்பியம் சுட்டுகின்றது. அவ்வாறே தலைவியின் எண்ணத்தை வாயில்கள் தலைவனுக்குத் தெரிவிப்பர்; ஒரு நாட்டு மன்னனின் தகவலைத்  தூதர் அடுத்த நாட்டு மன்னனுக்குப் புலப்படுத்துவர். இலக்கியங்களில் அக / புறப் பாடல்களில் இத்தகைய சொல்லாடலைக் காணலாம். பக்தி இலக்கியங்களில் நாயகநாயகி பாவம் என்னும் உத்தி இந் நிலையில் உன்னத்தக்கது. தன் கருத்தைப் பிறரைக்கொண்டு உணர்த்துவதும், பிறர் கருத்தைத் தன் வாயால் தெரிவித்தலும் நாயகநாயகி பாவனையில் காணப்படுகின்ற வெளியீட்டியல் உத்தி. இறைவனைத் தலைவனாகக் கருதிப் பாடும்போது, கிளி போன்றவற்றைத் தூதாக அனுப்புவதும் உண்டு. சிற்றிலக்கியங்களில் இது மிகுதி. இத்தகைய பாக்களால் உணர்த்தப்படுகின்ற நுண்ணுணர்வைத் தெளிந்தால் முருகியல் மேலோங்கும். திரையிசைப் பாடல்களிலும் இத்தகைய போக்கைக் காணலாம். தமிழ் இலக்கியப் பொருண்மையில் இவை குறிப்பிடத்தக்கவை.

நன்றி: இணையத் தரவுகள்                          *******

                                    

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு