தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் ’அன்மை’ – கருத்தாய்வு

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

உயர்தனிச் செம்மொழியான தமிழ் இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது. இதனால் தமிழில் செறிவான சொற்கள் மிகுந்திருக்கின்றன. இதைக் கருதித் தொல்காப்பியர் விரிவான சொல்லிலக்கணம் வகுத்துள்ளார். அதோடு அவரது மொழிநடையாலும் பொருண்மைக் கருத்துகளை அறியலாம். இந்த மரபில் திருக்குறள் மொழிநடையும் சொற்பொருண்மை ஆய்வுக்கு வாய்ப்பாகின்றது. இந் நிலையில் இல்லாத நிலை என்று பொருள்படுகின்ற அன்மை என்னும் சொல் இவ் இரண்டு நூல்களிலும் பயிலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. தொல்காப்பியம்,

 தன்மை சுட்டலும் உரித்தென மொழிப

அன்மைக் கிளவி வேறிடத்தான (நூற்பா 508 )

 

என்னும் நூற்பாவில், ஒரு பொருளை எது? என்னும் ஐயம் நீக்கி, அது அன்று; இது தான்! என்று தெளிவாகச் சுட்டவேண்டும்  என்று குறிப்பிடுகின்றது. சான்றாக, இது மடமா? கோவிலா? என்று ஐயம் எழும்போது, உறுதியாக மடம் என்றறிந்தபின், கருத்துத் தெளிவிற்காக இது கோவிலன்று என்று உறுதிப்படுத்தவேண்டும். இது கருத்தாடல் நோக்கில் சிறப்பான கொள்கையாகும்.  விடுப்பவர் கருத்தைக் கேட்பவர் தெளிவாககக் குழப்பமின்றிப் புரிந்துகொள்ள இது வாய்ப்பாகும். அடுத்து மரபியலில்,

                        ……….ஒருதலை அன்மை ( நூற்பா 1610 )

என்று கருத்தை நடுநிலையில் நூல் நுவலவேண்டும் என்று வலியுறுத்துகின்றபோது அன்மை  (இல்லாமல்) என்னும் சொல்லை, கிளவியிய லில் (நூற்பா 508 ) கூறியவாறே ஆண்டுள்ளார். அடுத்து களவியலில் ,

                        பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்

                        அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும் ( நூற்பா1057 அடிகள் 31,32)

என்று தலைவன் வருகின்ற காலமும் வழியும் பாதுகாப்பு இல்லாதது என்னும் கருத்தில் ஆண்டுள்ளார். இது குறிப்பு வினையாக இயல்வதை வினையியலில்

 ( நூற்பா 699) குறிப்பிடுகின்றார். இவ்வாறு இல்லாத நிலையைச் சுட்டுவதாக அன்மை தொல்காப்பியத்தில் குறிப்பு வினையாக இயல்கின்றது.

            மொழி மரபையும் முன்னோர் கருத்தையும் போற்றுகின்ற திருக்குறள்,

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் ( 162)

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுன்மை நாணு பவர் (172)

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும் (185)

ஆகிய குறட்பாக்களில் முறையே,

                        அழுக்காறு இல்லாத நிலை,

                         நடுநிலைமை இல்லாத நிலை

                        உண்மைத் தன்மை இல்லாத நிலை

என்னும் கருத்தில் அன்மை என்னும் சொல்லை ஆண்டுள்ளது. இதனால் தமிழின் சொற்பொருள் வரலாற்றையும் வள்ளுவரின் மரபு போற்றுகின்ற மாண்பையும் தெளியலாம். இங்ஙனம் ஒவ்வொரு இலக்கியச் சொல்லையும் கருத்துணரின் சீர்மை சிறக்கும்; விளம்புகின்ற விழுமியமும் தெளிவாகும்; மானுடம் வெல்லும்.

    நன்றி: இணையத் தரவுகள்

              தமிழண்ணல் ( உரை. )2008, தொல்காப்பியம், மதுரை; மீனாட்சி புத்தக நிலையம்.

                                                                ********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு