சொற்பொருண்மை நோக்கில்மொழி நிறைபு

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            விளக்கவியல் இலக்கணத் தொன்னூலான தொல்காப்பியம் ஆங்காங்கே வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தமிழ்ப் பொருண்மையியல் கொள்கைகளைச் சுட்டுகின்றது. நுட்பமாக நோக்கின் பெரும்பாலான நூற்பாக்களில் பொருண்மையியல் கொள்கை புதைந்திருக்கும். அதன்படி, மொழி மரபு இயலின்,

            நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்தொருமொழி (நூற்பா 10 )

            குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே (நூற்பா 11 )

ஆகிய நூற்பாக்களும், மொழி நிறைபு என்னும் கலைச்சொல்லும் உன்னத்தக்கன. மொழியின் அனைத்துக் கூறுகளும் பொருண்மை மதிப்புடையன. எழுத்து, சொல்லின் பொருளை வேறுபடுத்துகின்ற ஆற்றலுடையது [அம்மா/ அம்மி]. அதாவது சொல்லின் ஓரெழுத்தை மாற்றினாலும் அந்தச் சொல்லின் பொருள் மாறுபடும். சொல் பொருளாற்றல் உடையது; தொடரின் உறுப்பாக அமைந்து கருத்தை உணர்த்தவல்லது. ஆயினும் தொடர்ச் சூழலை நோக்கியே சொல்லின் பொருளைத் தெளியவேண்டும்.  இம் மரபில் மேற்படி நூற்பாவிலுள்ள மொழி நிறைபு நோக்கத்தக்கது. அதாவது தமிழ்ச் சொல்லாக்கத்தில் ஓரெழுத்தோ/ பல எழுத்துகளோ முறைப்படி இணைந்து தனித்துப் பொருள் தரக்கூடிய/ தனித்தியங்கக்கூடிய சொல்லை ஆக்கும். ஒரு சொல்லில் ஒரே நெட்டெழுத்து [ ஆ, ஈ, ஐ, கை, தை ] இருக்கலாம்; ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் இடம்பெறலாம்[ இடு, படம், வட்டம்]  . எவ்வாறாயினும் அந்தச் சொல் பொருள் சுட்டுவதாகவும் தொடரின் உறுப்பாகவும் இயலவல்லதாக அமையவேண்டும் என்பதை மொழி நிறைபு என்னும் கலைச்சொல்லால் தொல்காப்பியம் சுட்டுகின்றது. உயிர்க் குற்றெழுத்துகள் ஐந்தும் இத்தகைய பொருண்மை ஆற்றல் இல்லாதவை. ஆயினும் உயிர்மெய்யெழுத்துகள் [ து, நொ ] , அ, இ, உ ஆகிய சுட்டெழுத்துகள், எ என்னும் வினாவெழுத்து ஆகியன ஓரெழுத்தொருமொழியாக இயங்கவல்லன. இத்தகைய பொருண்மைக் கொள்கையை விளக்குவதாக மொழி நிறைபு அமைகின்றது.

நன்றி: இணையத் தரவுகள்                                     ----------

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு