தொல்காப்பியத்தில் ’ அண்மை / அன்மை’ – ஒப்பொலிப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

உயர்தனிச் செம்மொழியான தமிழ் இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது. இதனால் தமிழில் செறிவான சொற்கள் மிகுந்திருக்கின்றன. இதைக் கருதித் தொல்காப்பியர் விரிவான சொல்லிலக்கணம் வகுத்துள்ளார். அதோடு அவரது மொழிநடையாலும் பொருண்மைக் கருத்துகளை அறியலாம்.  தொல்காப்பியத்தில் அண்மை [ அருகில் ] , அன்மை [ இல்லாமை ] ஆகிய குறைந்த ஒலி வேறுபாடுடைய பொருள் வேறுபடுகின்ற  ஒப்பொலிச் சொற்களின் பொருண்மையை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. இதனால் இலக்கணவியல் கொள்கைகளைத் தெளியலாம்.

அண்மை: பழந்தமிழ்ச் சொல்லான அண்மை அருகில்/ சிறிது காலத்திற்கு முன்னர் ஆகிய பொருளில் இன்று வரை இயல்கின்றது. அண்டை வீடு, அண்மையில் பெய்த மழை ஆகியவற்றை இவண் கருதலாம். தொல்காப்பியம்,

            அண்மை சுட்டிய = அருகில் (நூற்பா 210)

            அண்மைச் சொல்லே = அருகில் (நூற்பா 612)

            அண்மைச் சொல் = அருகில் (நூற்பா 616)

ஆகிய இடங்களில் இடப் பெயராகவும் / வினையெச்சமாகவும் அருகில்  என்னும் பொருளில் இச் சொல்லை ஆண்டுள்ளது.

அன்மை: இல்லாமை என்னும் பொருளுடைய குறிப்புவினை,

            தன்மை சுட்டலும் உரித்தென மொழிப

அன்மைக் கிளவி வேறிடத்தான (நூற்பா 508 )

என்னும் நூற்பாவில், ஒரு பொருளை எது? என்னும் ஐயம் நீக்கி, அது அன்று; இது தான்! என்று தெளிவாகச் சுட்டவேண்டும்  என்று குறிப்பிடுகின்றது. சான்றாக, இது மடமா? கோவிலா? என்று ஐயம் எழும்போது, உறுதியாக மடம் என்றறிந்தபின், கருத்துத் தெளிவிற்காக இது கோவிலன்று என்று உறுதிப்படுத்தவேண்டும். இது கருத்தாடல் நோக்கில் சிறப்பான கொள்கையாகும்.  விடுப்பவர் கருத்தைக் கேட்பவர் தெளிவாககக் குழப்பமின்றிப் புரிந்துகொள்ள இது வாய்ப்பாகும். அடுத்து மரபியலில்,

                        ……….ஒருதலை அன்மை ( நூற்பா 1610 )

என்று கருத்தை நடுநிலையில் நூல் நுவலவேண்டும் என்று வலியுறுத்தும்போது அன்மை  (இல்லாமல்) என்னும் சொல்லை ஆண்டுள்ளார். அடுத்து களவியலில் ,

                        பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்

                        அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும் ( நூற்பா1057 அடிகள் 31,32)

என்று தலைவன் வருகின்ற காலமும் வழியும் பாதுகாப்பு இல்லாதது என்னும் கருத்தில் ஆண்டுள்ளார். இது குறிப்பு வினையாக இயல்வதை வினையியலில்  (நூற்பா 699) குறிப்பிடுகின்றார். இவ்வாறு இல்லாத நிலையைச் சுட்டுவதாக அன்மை தொல்காப்பியத்தில் குறிப்பு வினையாக இயல்கின்றது.

            மேற்கூறியவாறு அண்மை , அன்மை  ஆகிய குறைந்த ஒலி வேறுபாடுடைய பொருள் வேறுபடுகின்ற ஒப்பொலிச் சொற்கள் தொல்காப்பியத்தில் இயல்கின்ற. இத்தகைய சொற்பொருண்மை இயங்கியலை அறிந்தால் இலக்கணவியல் கொள்கைகளைத் தெளியலாம்.

நன்றி : இணையத் தரவுகள்           ----------

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு