தாளிணை × தாளினை- சொற்கட்டமைப்பு வேறுபாடு
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழ் ஒட்டுமொழி; அடிச் சொல்லுடன் இலக்கண,
தொடர், பொருண்மைப் பொருத்தத்துடன் பின்னொட்டுகள்
இணைக்கப்பட்டுச் சொற்கள் கட்டமைக்கப்படுகின்றன. அதாவது பொருண்மைக் கூறுகளைப் பொருத்தமுடன்
இணைத்து, ஒவ்வொரு சொல்லும் தனிதனியாகப் பொருள் சுட்டுமாறு சொற்கள் ஆக்கப்படுகின்றன.
சான்று:
என்ன செயல் + எப்போது + யார் என்னும் பொருண்மைக்
கட்டமைப்பில் பேசு+கின்று+ ஆன் > பேசுகின்றான் என்னும் ஆண்பால் படர்க்கை நிகழ்கால வினைமுற்று ஆக்கப்படுகின்றது.
இந்தப் பொருண்மைக் கூறில் எந்தவொன்றை மாற்றினாலும்
சொற்பொருள் வேறுபடும். இந்தக் கட்டமைப்பைப் பள்ளி மாணாக்கர்க்கு உணர்த்தினால் பிழை
தவிர்க்கப்படுவதோடு மொழித் திறனும் மேம்படும். இன்று பள்ளி மாணாக்கர் என்னிடம் *தாளிணை*
என்னும் தொடர்ச் சொல்லைப் பிரித்து விளக்குமாறு கோரினர். அவர்களுக்கு தாள் + இணை [ இரண்டு பாதங்கள்] பன்மை என்றும், தாள்+இன்+ஐ [ஒரு பாதத்தை ] ஒருமை என்றும் பொருண்மைக்
கூறைப் பிரித்து ஒப்பிட்டு விளக்கினேன். தெளிந்ததாக மனநிறைவை வெளிப்படுத்தினர். மேலும் தாளிணை தொழு; தாளினைத் தொழு என்று ஒற்று மிகாமலும் மிக்கும் இயல்வதையும் விளக்கினேன்.
இவ்வாறு இலக்கணக் கூறுகளைத் தெளிவித்தால் கற்றல் குழப்பம் நீங்கிப் புரிதிறனும் ஆர்வமும்
சிறக்கும். தமிழ் இலக்கணம் அளவையிய நோக்கது; பொருண்மைத் தகைமை சான்றது; எளிமையானது;
இனிமையானது. கற்பித்தல் சிறந்தால் கற்றல் மேம்படும்; இனிமையாகும்.
*****
Comments
Post a Comment