இரண்டாம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உயர்தனிச் செம்மொழியான தமிழ் இலக்கிய வழக்கும் பேச்சுப் பயில்வும் கொண்ட இரட்டை
வழக்கினதாகும். பொருளுணர்தலில் இவ் இரண்டிலும் தொடர்கள் அடிப்படை
அலகுகளாக இயல்கின்றன. செறிவான மொழிநடை கொண்ட இலக்கியத்தில் புலமை
வெளிப்பாடாகவும் யாப்பு முதலிய கட்டுப்பாடுகளாலும் சீதையைக் கண்டேன் என்னும் பொதுவான
அமைப்பிலிருந்து தொடர்கள் மாறிக் கண்டேன் சீதையை என்றும் அமைவதுண்டு. இதனால் தொடர்ப் பொருண்மை சிதையாது; ஆனால் நடைப் பொருண்மை
மாறுபடும்; ஒரு தொடரில் எதை முதலில் சுட்டி அழுத்தம் கொடுக்கப்படுகின்றது?
என்பது புலனாகும்.
குறள் வெண்பாவில் இயல்கின்ற வள்ளுவத்தில் ஒரு குறட்பாவைத் தெளிவாகக் கருத்தறிய
அது எவ் அதிகாரத்தில் உள்ளது? அதில் எத்தனை தொடர்கள் உள்ளன?
ஒவ்வொரு தொடரிலும் உறுப்புச் சொற்கள் அனைத்தும் உள்ளனவா? பொதுத் தொடரமைப்பு மாறியுள்ளதா? தொகை உள்ளதா ? என்று நோக்கலாம்.
சான்றாக, கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள இரண்டாம் குறட்பாவை நோக்கலாம்:
கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின் (
குறள் 02 )
இதில் ஒரு நிபந்தனைத் தொடரும்,
ஒரு வினாத் தொடரும் கொண்ட கலவை வாக்கியம் முன்பின் மாறியமைந்துள்ளது.
நிபந்தனைத் தொடரை முதலில் அமைத்து, கற்றோர் என்பதை
அதன் தோன்றா எழுவாயாக அமைத்து, தொடரமைப்பை முறைப்படுத்தலாம்.
அடுத்து, கற்றதனால் ஆய பயனென்கொல்? என்னும் வினாத்தொடரிலுள்ள
குறை உறுப்புச் சொற்களை ஆகிய, எவன்[ என்ன ] என்று நிறைவாக்கி, கொல் என்னும் இடைச்சொல் பொருளழுத்தம் நல்குவதை அறியலாம். இதிலுள்ள வினா எதிர்மறை எச்சமாக அமைந்து இன்மைக் கருத்தைக் கொண்டிருப்பதைத்
தெளியலாம். வாலறிவன் என்னும் கூட்டுச்சொல் பண்புப்பெயராக அறிவாளரையும்
திறனாளரையும் சுட்டுவதைத் தெளியலாம். வாலறிவன் நற்றாள் என்னும்
சேர்க்கையில் கிழமைப்
பொருள் ஆறாம் வேற்றுமைத் தொகை அமைந்துள்ளதை அறியலாம்.
அப்போது அறிவையும் திறமையையும் போற்றுதலே, கற்ற கல்வியின் பயனாகும்
; கற்றோர் அறிவாக்கத்தையும் திறன் மேம்பாட்டையும் ஊக்கவேண்டும் என்னும்
மானுட மேம்பாட்டு இயல்நெறி இங்கு வலியுறுத்தப்படுவது புரியும். ஆயினும் உரையாசிரியர்கள்
இக் குறட்பாவுக்குத் தொன்மவியல் நோக்கில் உரை எழுதியுள்ளனர்.
இவ்வாறு தொடர்ப் பொருண்மை நோக்கில் ஒவ்வொரு குறட்பாவையும் அணுகினால் தெளிவு
வாய்ப்பாகும்; பனுவலின் பயன் மிகும் ; மானுடம் வெல்லும்.
நன்றி : இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment