ஏணிக்கு எத்தனை பல்? கண்?  மால்பு -பொருண்மை நோக்கு

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            தேவைக்கேற்ப மனிதர் புழங்கு பொருட்களை / கருவிகளை ஆக்கிப் பயன்படுத்துகின்றனர். எழுது பொருட்கள், கலப்பை, சமையல் பண்டங்கள், போர்க் கருவிகள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றை ஆக்கியதோடு, கீழிருந்து மேலேறப் படிக்கட்டோடு,  மூங்கிலிலும் கயிற்றிலும் படிக்கட்டைப் போன்று ஏணி செய்து பயன்படுத்துகின்றனர். பழங்காலத்தில் மதில்களில் ஏணி இருந்தது. இன்றைய வளர்ச்சியில்  வகைவகையான ஏணிகள் விற்பனைக்கு வருகின்றன.

அண்மையில் ஏணி வாங்கக் கடைக்குச் சென்றபோது ஒரு கடையில் , எத்தனை பல் ஏணி வேண்டும்?  என்றும் மற்றொரு கடையில் , எத்தனை கண் ஏணி வேண்டும்?  என்றும் கேட்டனர். இங்கு பல் / கண் ஆகியவற்றிற்கு ஒரே பொருள்; ஏறும் படி என்பதாகும்.

புறநானூற்றின் 105ஆம் பாடலில்  இந்த ஏணி மால்பு என்று சுட்டப்படுகின்றது. மால்பு என்பது மூங்கிலின் கணுவினிடத்தே புள் செருகிய ஏணி; இதனைக் கண்ணேணி ன்றலும் வழக்கு என்னும் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையின் உரை விளக்கம் நோக்கத்தக்கது. அதாவது வலிமையான இரண்டு மூங்கில்களை எடுத்து , அவற்றின் ஒவ்வொரு கணுவிலும் துளையிட்டு , ஒரே அளவில் குச்சிகளைச் செருகி இரண்டு மூங்கில்களையும் இணைத்தால் கண்ணேணி கிடைக்கும் ; இவ்வாறே கயிற்றிலும் நூலேணி செய்யலாம்.

பழந்தமிழரின் கருவி / புழங்கு பொருள் ஆக்கத் திறன் இதனால் வெளிப்படுகின்றது; இலக்கியங்கள் இவற்றைப் பதிந்து மக்கள் வாழ்வியலை / ஆக்கத் திறனை வெளிப்படுத்துகின்றன.

     நன்றி : இணையத் தரவுகள்                       *******

;

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு