”இசையும் அசையும்” – தொல்காப்பியத் தொடர்ப் பொருண்மைக் கொள்கை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

 

            உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் தொன்மை / விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியம்  ஒவ்வொரு நூற்பாவிலும் தமிழ்ப் பொருண்மைக் கோட்பாட்டை வகுத்துரைக்கின்றது. அதன்படி பொருளதிகாரத்தின் ஐந்தாம்  இயலான பொருளியல் இலக்கியப் பொருண்மையை , அதாவது பாடலின் நுண்பொருளை அறியும் நுட்பத்தை இலக்கணவியல் / இலக்கியவியல் பாங்கில் எடுத்துரைக்கின்றது.

            தரவுகளின் அடிப்படையில் நுட்பமாக ஆய்ந்து நூலை ஆக்கியுள்ள தொல்காப்பியர்,  27 இயல்களுக்கும் கொள்கைவிளக்க நோக்கில் தலைப்பிட் டுள்ளார்.  இதை உரையாசிரியர்கள் தெளிவித்துள்ளனர். பொருளியலின் இயல் விளக்கத்தில், ‘சொல்லதிகாரத்தில் விளக்கப்பட்ட சொல்லிலக்கண மரபிலிருந்து மாறுபடுகின்ற இலக்கியச் சொற்றொடர்களுக்கும் முறையாக மரபுப்படி பொருள்கொள்வதை எடுத்துரைக்கின்ற பகுதி’   என்று இதை நச்சர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.  இந்த இயலின் நூற்பாக் கருத்துகளும் இதை மெய்ப்பிக்கின்றன. இக் குறிப்புரையில் பொருளியலின் முதல் நூற்பாவான,

                இசை திரிந்து இசைப்பினும் இசையுமன் பொருளே

                அசை திரிந்து இசையா என்மனார் புலவர் 

என்பதில், இசை, அசை ஆகிய சொற்கள் சிறப்புப் பொருளில் பயில்கின்றன. இசை என்னும் சொல் பண்பாகுபெயராகச் சொல்லையும், அசை என்னும் சொல் தொழிலாகுபெயராகச் சொற்பொருட்கூறுகளான விகுதி முதலியவற்றையும்  சுட்டுகின்றன. ஓர் இலக்கியத் தொடரில் இலக்கண நிரலில் சொற்கள் அமையா விடினும் , அந்தப் பாடலின் அடிக்கருத்திற்கேற்பவும் விளம்பு பொருளின் அடிப்படையிலும் சூழல் கருதித் திரண்ட கருத்தைத் தெளியவேண்டும்; தொடரின் உறுப்புச் சொல்லமைப்பை  மட்டும் நோக்காமல் பாவின் கருத்தை உணரவேண்டும். இலக்கண அமைப்பைக் காட்டிலும் முறையான பொருண்மைத் தெளிவு தேவையானது என்னும் பொருண்மைக் கோட்பாடு இவண் வலியுறுத்தப்படுகின்றது. [இதோடு பொருள்கோளையும் ஒப்பலாம்] இது உலக இலக்கியப் பண்பாகும். இவ்வாறே இவ் இயலின் மற்ற நூற்பாக்களையும்  நோக்கலாம். இதனால் ஒவ்வொரு நூற்பாவிலும் தமிழ்ப் பொருண்மைக் கோட்பாட்டைத் தொல்காப்பியம் வகுத்துரைப்பதைத் தெளியலாம். மேலும் உரையாசிரியர்களின் தமிழ்ப் பொருண்மைப் புலமையையும் பங்களிப்பையும் போற்றலாம்.

                                 நன்றி: இணையத் தரவுகள்.                  *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு