மன வளமையோடு கூடிய பொருளுடைமைநற்றிணை விழுமியம்

                                          புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

      

        நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று ; தன் செய்வினைப் பயனே!

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே!.

 என்னும் மருதத் திணைத் தலைவனுக்குத் தோழி உரைத்த , நற்றிணை 210ஆம் பாடலில்  மளைகிழான் நல்வேட்டனார் இல்லற அறத்தை / இல்லாளின் உணர்வை மதித்து ஒழுகுவதன் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றார். இதில் தலைவனின் பரத்தமை வேட்கையும் கடியப்படுகின்றது. வளமை ஆடம்பர வாழ்க்கைக்காக அன்று; அறம் புரியவே ; பிறரது உணர்வை மதிப்பதோடு தமரின் முறையான எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவதற்காகவே. அன்புடன் தலைவியை மதித்துப் போற்றுக: பரத்தமை தவிர்க; அன்புடனும் அறச் சிந்தனையோடும் இனிமையாக ஒழுகுக என்னும் இல்லற / வாழ்வியல் விழுமியம் இவண் வலியுறுத்தப்படுகின்றது. இதைப் பெண்ணிய/ சமூக உறவியல்/ பண்பாட்டு நோக்கிலும் பாராட்டலாம்.

            இப் பாடலிலுள்ள புன்கண்=தன்னால் பிறருக்கு உண்டாகின்ற துயர்; , மென்கண்= இனிய பண்பு ஆகியன உற்றுநோக்கத்தக்கன. அதோடு செல்வம் என்பது பொருள் வளமையை மட்டுமன்றி; மன வளமையையும்  குறிப்பதை உன்னலாம். இறுதி ஏகாரம் வற்புறுத்துவதாக இயல்கின்றது. இத்தகைய விழுமியங்களை இளைஞர்களின் மனதில் ஆழ விதைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

பழந்தமிழ் இலக்கியங்கள் கதை கூறுவதோடு நன்னடத்தையை வகுத்துரைத்து, இலக்கியம் வாழ்க்கைக்காக என்கின்ற உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய உலகில் வற்புறுத்தப்படுகின்ற மனநலம் / இனிய நடத்தை / துணைநலம் ஆகியவற்றை வலியுறுத்துவதாக இப் பாவடிகள் இயல்வது சிறப்புக்குரியது. வாழ்க்கைச் சிக்கலை வெளிப்படுத்தித் தீர்வு கூறுவதாக இவ் அடிகள் திகழ்கின்றன.

நன்றி : இணையத் தரவுகள்                       *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு